உணவை ருசித்துச் சாப்பிடுவது நீரிழிவு நோயை தடுக்கும்!

ஆர்.வி கல்லூரியில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு

காரமடை, டாக்டர்.ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பாக உலக நீரிழிவு தினக் கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். கோவை, உணவியல் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் பிரதீபா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், கணையத்தின் முறையற்ற செயல்பாடு காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு சரியான நேரமும், கட்டுப்பாடும் உள்ளது. பசியுடன் இருக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், நீரிழிவு நோயிலிருந்து விடுபடவும் நாம் கவனத்துடன் சாப்பிடப் பழக வேண்டும்.

சாப்பிடும்போது மொபைல் போன் பயன்படுத்தவோ அல்லது வேறு வேலை செய்யவோ கூடாது. உணவை ருசித்துச் சாப்பிடுவது நீரிழிவு நோயை தடுக்கும். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஒரு பழம் மற்றும் 300 கிராம் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மற்றும் ஏழு மணி நேரம் உறங்குவது ஆரோக்கியமான உடல் நலனைத்தரும்.

15 நாட்களுக்கு ஒரு முறை மௌனவிரதம் மற்றும் உண்ணாவிரதத்தை கடைபிடிப்பது உடலையும், மனதையும் மேம்படுத்தும் என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.