“சர்க்கரை நோய் அதிகம் வரும் வாய்ப்பை நாமே உருவாக்குகிறோம்!”

கோவையில் விழிப்புணர்வு நடைபயணம்

கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் அண்டு மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. இந்த வாக்கத்தான் நேரு விளையாட்டு அரங்கில் துவங்கி பார்க் கேட் வழியாக ராம்நகர் விவேகானந்தா சாலை வழியாக கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

கோவை மாநகர சுகாதாரத் சேவை துறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரா கொடியசைத்து விழிப்புணர்வு வாக்கத்தானை துவக்கிவைத்தார். அப்போது ரோட்டரி மாவட்டம் 3201-ன் மண்டலம் 5-ன், மாவட்ட இயக்குனர் ரோட்டேரியன் மயில்சாமி மற்றும் கோயம்பத்தூர் மருத்துவர்கள் சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் சத்யன் ஆகியார் முன்னிலை வகித்தனர்.

கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் அண்டு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாலமுருகன் கூறியதாவது: இந்தியாவிலேயே கிட்டத்தட்ட 77 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர். நமது நாடு சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவில் சீனாவுக்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் இருக்கின்றோம். இந்த எண்ணிக்கை அதிர்ச்சியும், வருத்தத்தையும் கொடுக்கக்கூடியது.

இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கிட்டத்தட்ட 10 – 12 விழுக்காடு நகரங்களிலும், 8 – 10 விழுக்காடு கிராமங்களில் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கண்டுபிடித்தால், இரண்டு பேர் இந்த நோய் இருப்பது தெரியாமலே இருக்கின்றார்கள். ஆரம்ப கட்ட சர்க்கரை நோயின் அளவு வெறும் வயிற்றில் 100 – 126 குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் இல்லை. 126-க்கு மேல் இருந்தால் தான் சர்க்கரை நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக சர்க்கரை நோய் நிறுவனம் கணித்து கூறியிருக்கின்றன. அந்த கணக்கின்படி கிட்டத்தட்ட 50 விழுக்காடு நபர்களுக்கு நோய் கண்டறியப்படாமல் இருக்கின்றது. பெரும்பகுதியான நேரங்களிலே இந்த சர்க்கரை நோயானது எந்தவித அறிகுறிகளுமே இல்லாமல் இருக்கக்கூடியது.

பெரும்பாலானோர் வேறு சிகிச்சைக்காக அல்லது பரிசோதனைக்காக போகும் பொழுது தான் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நோய் தலை முதல் கால் வரை பாதிக்க கூடியது.

இந்த வருட உலக சர்க்கரை நோய் தினத்தின் முக்கிய கருத்தானது தரமான சர்க்கரை நோய் சிகிச்சை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதாகும். நோய் வரக்கூடிய வாய்ப்பு இருப்பவர்கள், உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், குடும்பத்தில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிகமாக மன அழுத்தம் இருப்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இன்று நாம் இருக்கக்கூடிய சூழ்நிலை, நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள், நடை பயிற்சி குறைவு, அதிகப்படியான வாகனப் பயணம், மேற்கத்திய கலாச்சாரத்தினுடைய தாக்கம், வறுக்கப்பட்ட உணவு, செயற்கை உணவு, தூரித உணவுகள் மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு இன்று அதனுடைய தாக்கம் மூலம் சர்க்கரை நோய் அதிகமாக இருக்கின்றது. இதன் மூலம் நோய் அதிகமாக வரும் வாய்ப்பை நாமே உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

நாம் சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடித்து, அதிக கலோரி உள்ள உணவுகளை குறைத்து சீரான உடற்பயிற்சி மனத்தை இலகுவாக வைத்துக் கொள்ளுதல், மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய யோகா போன்றவற்றில் ஈடுபவதன் மூலமாக சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். சர்க்கரை நோய் வந்தவர்கள் அதை கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருக்கவும் முடியும். சர்க்கரை நோய்க்கான மருத்துவரிடம் சென்று நாம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையாவது கண்களை, இருதயத்தை, சிறுநீரகத்தை, கால் நரம்புகளை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

கால் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. சரியான காலணிகளான எம்சிஆர் அல்லது எம்சிபி போன்ற காலணிகளை அணிய வேண்டும். வெறும் காலில் நடப்பது, பாதயாத்திரை செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் இடத்திலே வெறும் காலில் சென்றால் கொப்பளங்கள், வந்துவிடும். கால்களை தினமும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக தினமும் கால்களை இதமான இளஞ்சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். காலில் புண்கள் வந்தால் தாமாகவே மருந்துகளை வாங்கி சரி செய்ய முயற்சிக்க கூடாது. மருத்துவரிடம் காண்பித்து அதற்கான சிறப்பு சிகிச்சையை பெறவேண்டும் என்று கூறினார்.