கே.பி.ஆர் கல்லூரியில் பண்பாட்டு மையம் தொடக்கம்

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில், நமது நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளின் கலாச்சாரம், கல்வி, நுண்கலைகள் மற்றும் இயற்கை ஆகியவற்றை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் பொருட்டு “ஓஷன்” என்ற பண்பாட்டு வளர்ச்சி மையம் அமைக்கப்பெற்று, அதன் தொடக்கவிழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கே.பி.ஆர். குழும நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இவ்விழாவில் பன்மொழி அறிஞர்கள் சிறப்பு அழைப்பார்களாகக் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் முதன்மை விருந்தினராக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்துகொண்டு பேசுகையில்: திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, விவேக சிந்தாமணி ஆகிய நூல்களிலிருந்து நன்னெறிகள் சார்ந்த கருத்துகளையும், தமிழ்ப்பண்பாட்டின் மேன்மைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கோவை ‘பாரத் காலா சங்கமம்’ அமைப்பின் தலைவர் குர்தீப் சிங் ஆனந்த் இவ்விழாவில் கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்டு கூறியதாவது: பாரத கலா சங்கமம் மூலம் இந்திய மாநிலங்களின் அனைத்து நுண்கலை வடிவங்களின் ஒருமைப்பாடு என்ற தலைப்பில் பாரதியார் பாடலுடன் உரையை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

சிறப்பு அழைப்பாளர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரும், பெங்களூரு மொஸைக்யூ நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஹிரோ இஷிடா ஜப்பானிய கலாச்சாரம், தொழில்நுட்பம் மற்றும் தற்காப்புக் கலைகளை ஆகியவற்றை விவரித்தார்.

மற்றுமொரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மீதாலால் நிறுவனத்தின் பட்டையக் கணக்காளர் கைலாஷ் குமார் பேசுகையில்: இந்திய ஆண்களின் மீசை, பெண்களின் நெற்றியில் இடும் திலகம், கைகளால் உணவு உண்பது, உலகின் பெரிய கோயில்கள், கார்பனேட்டட் தண்ணீரைத் தவிர்ப்பது, யோகாவின் முக்கியத்துவம், இந்திய உணவுகள், புகழ்பெற்ற குருமார்கள், சுதந்திரப் போராளிகள் போன்ற நமது நாட்டின் சிறப்பு அம்சங்களைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கர்நாடக சங்கத்தை சார்ந்த சங்கர், கேரள சங்கத்தைச் சார்ந்த ஜனார்த்தனன், பஞ்சாபி சங்கத்தை சார்ந்த சுக், உலக தெலுங்கு கூட்டமைப்பைச் சார்ந்த கிருஷ்ண கோபால் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் சிறப்புச்சொற்பொழிவாளர்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத்தலைவர் நல்லசிவம் “தமிழ்ப் பண்பாட்டில் இசைமரபு” என்ற தலைப்பிலும், மதுரை வை-ட்ரீ டெக்னாலஜி சொலுஷண் நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை செயல் இயக்குநருமான செல்வமுத்துக்குமார் “தாய்லாந்து நாட்டின் உணவுக் கலாச்சாரம்” என்ற தலைப்பிலும் உரையாற்றிச் சிறப்பித்தனர்.

கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமையேற்ற இவ்விழாவில் கல்லூரியின் முதன்மைச் செயலதிகாரி நடராஜன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து துறைசார்ந்த மாணவ. மாணவியர்களுக்கு கலந்துகொண்டனர்.