வடகிழக்கு பருவமழை எதிரொலி காய்ச்சல் பாதிப்பை கண்டறிய 500 வீட்டுக்கு ஒரு நபர்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கொரோனா இரண்டாவது அலையின் போது மாநகராட்சி சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி வீடு வீடாக சளி, காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணி முழு வீழ்ச்சில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி சார்பாக சளி, காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணியில் 4500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒவ்வொரு வார்டிலும் 100 வீட்டுக்கு ஒரு நபர் நியமிக்கப்பட்டு இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. எனினும் வடகிழக்கு பருவமழை காரணமாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனை தடுக்க 500 வீட்டுக்கு ஒரு நபர் நியமனம் செய்து சளி, காய்ச்சல் பாதிப்புகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவையில் வடகிழக்கு பருவமழை காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை அடுத்து 500 வீட்டுக்கு ஒரு நபர் நியமிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர தினமும் 50 முதல் 60 காய்ச்சல் முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.