கோவையில் 33 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கோவையில் என்.ஐ.ஏ மற்றும் மாநகர போலீசார் இணைந்து 33 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பாக கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஜமேஷா முபினுடன் தொடர்பிலிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டுள்ளது.

கோவை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கோவை மாநகர போலீசார் இணைந்து மாநகரில் 33 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் சகோதரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மாநகரில் உக்கடம், புல்லுக்காடு, போத்தனூர், ரோஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையை முன்னிட்டு மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.