தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த மாநாடு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்திய வேளாண் பொறியாளர் சங்கத்தின் 56 வது மாநாட்டின் தொடக்க விழா புதன் கிழமை நடைபெற்றது.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கான வேளாண் பொறியியல் கண்டுபிடிப்புகள் குறித்தும், இந்தியா @ 2047 வேளாண் பொறியியல் கண்ணோட்டம் பற்றிய சர்வதேச கருத்தரங்கு இன்று துவங்கி நவம்பர் 11 ஆம் தேதி வரை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக காணொளி வாயிலாக இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் தலைமை இயக்குநர் ஹிமான்ஷு பதக் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். இந்திய வேளாண் பொறியாளர் சங்கத்தின் தலைவர் சியாம் நாராயண் ஜா நிகழ்வில் தலைமை உரையாற்றினார்.

இக்கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பல்கலைக்கழகத்திண் துணைவேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்தக் கருத்தரங்கிற்கு இந்தியாவில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். 700 க்கும் மேற்பட்டவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். 500 க்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர்கள், வேளாண் பொறியியலாளர்களும், இத்துறை சார் மாணவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர் எனக் கூறினார்.

கருத்தரங்கில் இந்திய உணவு பாதுகாப்பு மட்டுமல்லாமல், சர்வேதச அளவில் உணவு பாதுகாப்பிற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு அவை அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும் சிறு, குறு விவசாயிகளுக்கான இயந்திரங்களை மாற்றி அமைப்பது, உதாரணத்திற்கு நெல் இயந்திரத்தை பிற பயிர்களுக்கும் உபயோகப்படுத்தும் படி மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்படும். மேலும் நீர் மேலாண்மை, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறித்தும் கலந்துரையாடப்படும்.

இந்த நிகழ்வு வேளாண்மை பொறியியல் பற்றிய ஆராய்ச்சியில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கும், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஆராய்ச்சி கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கும் மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் ஒரு தளமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்திய வேளாண் பொறியாளர் சங்கத்தில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர் என தெரிவித்த அவர், ஒவ்வொரு ஆண்டும் இச்சங்கம் சார்பாக மாநாடு நடத்தப்படும். இந்த ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள வேளாண்பொறியியல் துறை துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து இங்கு இந்த மாநாடு நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.