இந்துஸ்தான் கல்லூரியில் ரிமோட் பைலட் பயிற்சி மையம்

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதீ நவீன ஆளில்லா விமான ஓட்டுநர் பயிற்சி மையத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கோவை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களில் இந்த ட்ரோன் விமான பயிற்சி மையத்தினை தமிழக முதல்வர் சென்னை டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் தொடங்கி வைத்தார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தமிழகம் நாட்டிலேயே முன்னோடியாகத் திகழ்கிறது, மேலும் நாட்டிலேயே மிகப்பெரிய ட்ரோன் பைலட் பயிற்சி மையமாகத் தமிழகம் திகழ்கிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அனைத்து சாத்தியமான வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது என்றார்.

நிகழ்வில் மாநிலத்தின் விண்வெளி துறையில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஜெயா கூறுகையில்: இந்துஸ்தானில், மாணவர்களுக்கு வரவிருக்கும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தி பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களை வழங்குவதில் ஆர்வமாக உள்ளோம். சமீப காலங்களில் ட்ரோன் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதை நாங்கள் நன்கு அறிவோம், அதற்கு ஏற்ப ட்ரோன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக AICTE ஆதரிக்கும் IDEA ஆய்வகத்தில் பிரத்யேக இடத்தை ஒதுக்கியுள்ளோம்.

ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பு, ட்ரோன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகத்தை இயக்குவதற்கான அங்கீகாரத்துடன், மாணவர்களை அடுத்த நிலைக்கு மாற்றும் ஆராய்ச்சி முதல் பயன்பாடு வரையிலான பகுதிகளை நாங்கள் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

ட்ரோன் பைலட்டாக சிறந்து விளங்க விரும்பும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த இளம் மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்துஸ்தானில் டிஜிசிஏ அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பைலட்டாக பயிற்சி பெற அழைக்கிறோம் எனத் தெரிவித்தார்.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு, தலைமை நிர்வாக அலுவலர் கருணாகரன், முதல்வர் ஜெயா, டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் வானூர்தி பொறியியல் துறையின் முயற்சியைப் பாராட்டி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.