கோவையில் 30 வருடமான அரச மரத்திற்கு மறுவாழ்வு

கோவையில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்த 30 வயதான அரச மரம் வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது. இதனை வனத்துறை பயிற்சி அதிகாரிகள் நேரடியாக பார்த்து மரம் மறு நடவு செய்வதை கற்றுக் கொண்டனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதற்காக செல்வபுரம் பிரதான சாலையில் இருந்த 30 வருட பழமையான அரச மரம் வெட்டி அகற்றப்பட வேண்டி இருந்தது.

இந்த நிலையில், ஓசை தன்னார்வ அமைப்பும், வனத்துறையும் இணைந்து அரச மரத்தை அந்த பகுதியில் இருந்து மற்றொரு இடத்தில் மறுநடவு செய்ய முன்வந்தன. இதனிடையே அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

தொடர்ந்து அந்த அரச மரத்தை வேறுடன் எடுக்கும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தின் பக்கவாட்டுப்பகுதிகள் தோண்டப்பட்டு, அரச மரம் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது.

இந்த அரச மரமானது வடகோவை பகுதியில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்டது. இந்த பணிகளை தமிழகம், ஜம்மு காஷ்மீர், சட்டிஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து கோவைக்கு பயிற்சிக்காக வந்திருக்கும் வனத்துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு, மரம் மறுநடவு செய்யும் முறையை கற்றுக் கொண்டனர்.

இதனிடையே முதல் முறையாக மரம்மறு நடவு செய்வதை நேரடியாக பார்த்து கற்றுக்கொண்டதாகவும், இது நல்ல அனுபவத்தை கொடுத்திருப்பதாகவும் பயிற்சி உதவி வனப்பாதுகாவலர்கள் தெரிவித்தனர்.