
– காவல் கண்காணிப்பாளர் தகவல்
கோவை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 12 பேர் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தவறவிட்ட மற்றும் திருடு போன ரூ.23 லட்சம் மதிப்புடைய செல்போன்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.90 லட்சம் மதிப்புடைய 604 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.
சைபர் குழுக்கள் அமைக்கப்பட்டு செல்போன்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 17 பேருக்கு மறுவாழ்வு தேவை என்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் ரூ. 2.5 கோடி மதிப்பிலான திருட்டு மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 28 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 25 பேருக்கு குண்டர் சட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நன்னடத்தை பிணையத்தை மீறி குற்ற செயலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்ட காவல்துறை சார்பாக ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் தற்போது வரை 979 பள்ளிகளில் 2450 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
சிறுமுகை, கிணத்துக்கடவில் கஞ்சா இல்லாத கிராமம் என போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கோவை நகரில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு புறநகர் பகுதியில் நாலு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 30 பேர் உளவுத்துறை கண்காணிப்பில் உள்ளனர் என அவர் கூறினார்.