மருதமலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள சாலை இரு புறங்களிலும் பொம்மைக் கடை, பூக்கடை, பழக்கடை, மிட்டாய் கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருவதால், மருதமலை அடிவார சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுவும் விழாக்காலங்களில் இருப்புறங்களிலும் கடைகள் ஆக்கிரமித்து இருப்பதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே வந்த நிலையில் அடிவாரத்தில் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என கடைக்காரர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று மருதமலை அடிவார பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடைபெற்றது. இந்த பணியானது நொடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரதி, சாலை ஆய்வாளர் ஜாய் சுகன்யா மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலமாக மருதமலை கோவிலுக்கு செல்லும் பாதை விலாசமாகியுள்ளது.