இடி, மின்னலின்போது என்ன செய்ய வேண்டும்.! – கோவை மின்துறை அதிகாரி

கோவை: இடி, மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்  சுதா கூறியிருப்பதாவது:-

இடி அல்லது மின்னலின் போது உடனடியாக கான்கிரீட் கூரையாலான பெரிய கட்டிடம், வீடு அல்லது பஸ், வேன், கார் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சமடையக் கூடாது.

மேலும் திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது. இடி இடிக்கும்போது கண்டிப்பாக டி.வி.க்கு வரும் கேபிள் இணைப்பை துண்டித்துவிட வேண்டும். மின்மாற்றியில் பியூஸ் போயிருந்தால் அதனை சரி செய்ய மின் ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகளின் இழுவை கம்பிகள் அருகே செல்ல வேண்டாம். வீட்டில் உள்ள மின் சாதனத்தில் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே வீட்டில்  உள்ள மெயின் சுவிட்ச்சை ரப்பர் காலணிகளை அணிந்து சென்று அணைத்துவிட வேண்டும்.

பின்னர் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  ஈரமான கைகளால் சுவிட்சை தொட வேண்டாம்.மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது