கோவை கார் வெடிப்பு: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு

கோவை மாநகரில் கடந்த 23 ஆம் தேதியன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டு விடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த அன்று அதிகாலை வேளையில் அப்பகுதியில் விழிப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டவுடன் ஜமேஷா முபினால் மேலும் அவ்வழியே தொடர்ந்து காரைச் செலுத்த இயலவில்லை.

இதனைத் தொடர்ந்து அவ்விடத்திலேயே கார் சிலிண்டர் வெடித்து அவரும் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் காரணமாகவும், காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒரு சில நபர்கள் உள்நோக்கத்துடன் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக தடுக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் நிலைமை திறம்பட கையாளப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் தனிப்படைகள் மூலம் புலன் விசாரணை முடக்கி விடப்பட்டு 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, அச்சம்பவம் தொடர்பாக 5 பேர் 24.10.2022 அன்றே கைது செய்யப்பட்டனர்.

மறுநாள் 6 வது நபரும் கைது செய்யப்பட்டார். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் அடுத்த தினமே மேற்கொள்ளப்பட்டன. இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வண்ணம் சேவையாற்றிய காவல்துறையினரின் இப்பணியைப் பாராட்டி மேலும் ஊக்கப்படுத்தும்.வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 58 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிடும் அடையாளமாக 14 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் போலீஸ் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.