கே.பி.ஆர் கல்லூரியில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்த போட்டி

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் படைப்புகளை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி 4.0 என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட போட்டியில் மாணவர்கள் திட்ட படைப்புகளை காட்சிப்படுத்திருந்தனர். பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பின் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அனைத்து துறைகளின் மாணவர்களிடம் இருந்து 120 திட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

இதிலிருந்து 26 மாதிரி திட்ட படைப்புகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு ஷ்னீடர் (Schneider) எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் அமர்நாத், சென்னை டெலி கம்யூனிகேஷன் நிறுவனத்தில் பொது மேலாளர் அருணாச்சலம் ஜெயராமன், வி.வி.டி.என் நிறுவனத்தின் மேலாளர் சிவக்குமார் வெள்ளியங்கிரி ஆகியோர் மதிப்பீட்டாளர்கள் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இது கல்லூரியில் அனைத்து மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, இதில் பங்கு பெறும் மாணவர்கள் தொடர்ந்து மாநில அளவிலும் மற்றும் தேசிய அளவிலும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுவர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுமைகள் மட்டும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் தலைவர் கார்த்திகேயன் தலைமையிலான பேராசிரியர்கள் செய்திருந்தனர்.