ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் தூய்மை இந்தியா உறுதிமொழிக்கு கலாம் சாதனை புத்தகத்தில் இடம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்ட, ‘தூய்மை இந்தியா 2.0’ மெகா உறுதிமொழி, கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ‘தூய்மை இந்தியா 2.0’ மெகா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ராம்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றார்.

சென்னை நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, ‘தூய்மை இந்தியா 2.0’ உறுதிமொழியை வாசிக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வு ‘கலாம்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உலக ஒற்றுமை தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்றுக் கொண்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓட்டம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் கல்லூரி சுற்று வட்டாரப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன், தீபக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.