பொறுப்பு இருவருக்கும் உண்டு

தீபாவளிக்கு முந்தைய நாள், கோவை மாநகரின் மையப் பகுதியில் காரில் நடந்த பயங்கரவாத சம்பவம் தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படும் சூழலாக மாறியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்து வந்த தமிழகத்துக்கு கால் நூற்றாண்டுக்கு முன்பாக, 1998 இல் முதல் கரும்புள்ளியாக மாறியது கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம். அப்போதைய பாஜக தேசியத் தலைவர் எல்.கே.அத்வானி கோவை வருகையின்போது, 11 வெவ்வேறு இடங்களில் 13 குண்டுகள் வெடித்ததில் 58 பேர் இறந்தனர். 250 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசுக்கு மிகப்பெரிய கரும்புள்ளியாக இச்சம்பவம் மாறியது. ஏன் அரசியல் ரீதியாகக்கூட இது கோவை மட்டுமன்றி கொங்கு மண்டலத்திலும் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இப்போது, மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடக்கும் சூழலில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பதும், நல்லவேளையாக ஆள்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பதற்றம்:

தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை மாநகரில் பயங்கவாத தாக்குதலுக்கான அறிகுறியுடன் காரில் எரிவாயு உருளை வெடித்துள்ள சம்பவம், அதில் இறந்த ஜமேஷா முபினின் தொடர்பு பின்னணி, அவரது வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம், தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவ துருப்புகள் உள்ளிட்டவை மீண்டும் கோவை மாநகர மக்களிடம் ஒருவித பதற்றத்தை உருவாக்கியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இச்சம்பவத்தை பாஜக தான் முதலில் கையில் எடுத்து அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்து உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இருப்பினும், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கூட இதை நேரடியாக கண்டித்திருப்பதை பார்க்கும்போது இச்சம்பவத்தில் எவ்வளவு ஆழமாக சென்று அதிரடி நடவடிக்கையை திமுக அரசு எடுக்கவேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு அம்பலம்:

கார் வெடி விபத்தில் இறந்த ஜமேஷா முபின் வீட்டில் 55 கிலோ வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் குண்டுகள் வெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக ஜமேஷா முபினிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது, கார் வெடி விபத்து நடப்பதற்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்பு நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள் என் குற்றங்களை மறந்துவிடுங்கள் என் இறுதிச்சடங்கில் பங்கேறுங்கள், எனக்காக வழிபாடு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளது என இவற்றையெல்லாம் முடிச்சுப் போட்டு பார்க்கும்போது கார் வெடி விபத்துக்குப் பின்னால் பயங்கரவாத சதி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

கோவை மாநகரில் டவுன்ஹால், பெரியகடைவீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்டவை பெரிய பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் அதிகம் உள்ள வர்த்தக பகுதியாகும். இங்கு சாதாரண நாள்களிலேயே மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். எனவே, இந்த வர்த்தகப் பகுதிகளில் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக போலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக, காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில், பெரியகடை வீதி சந்திப்பு அருகே உக்கடம் போலீசாரின் புறக்காவல் நிலையம் எனப்படும் சோதனைச் சாவடி உள்ளது.

உளவுத்துறை தோல்வி:

அக்.23 ஆம் தேதி அதிகாலையில் ஜமேஷா முபின் தான் திட்டமிட்டபடி, காரில் சிலிண்டர் உள்ளிட்ட வெடிபொருள்களுடன் கோட்டைமேட்டில் இருந்து சங்கமேஸ்வரர் கோயில் வழியாக பெரியகடை வீதி நோக்கி வந்துள்ளார். காரை மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிக்கலாம் என்ற திட்டத்துடன் ஜமேஷா முபின் வந்திருக்கலாம்.

ஆனால், அந்த சாலையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசார் சோதனையில் இருப்பதை பார்த்து ஜமேஷா முபின், கோயில் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்க முற்படும்போது எரிவாயு உருளை வெடித்து இறந்திருக்கலாம் அல்லது போலீசார் தன்னை பிடித்து விடுவார் என்று எண்ணி திட்டமிட்டு எரிவாயு உருளையை வெடிக்கச் செய்திருக்கலாம் என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்தகைய பயங்கரவாத பின்னணி கொண்ட நபரான ஜமேஷா முபின், அவரை தொடர்ந்து கைதாகியுள்ள 5 பேரும் என்.ஐ.ஏ. விசாரணை வளையத்தில் ஏற்கெனவே இருந்தவர்கள் என்பதால் மாநில அரசின் கியூ பிராஞ்ச் தொடர் கண்காணிப்பில் இவர்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய கண்காணிப்பு வளையத்தில் ஜமேஷா முபின் உள்ளிட்ட 6 பேர் வைக்கப்பட்டிருந்தார்களா அல்லது கண்காணிப்பில் இருந்து அவர்கள் தப்பியிருந்தார்களா என்பதை உளவுத்துறை தான் விளக்க வேண்டும். அத்தகைய கண்காணிப்பில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இது முற்றிலும் உளவுத்துறை தோல்வியே என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

அரசியல் தாக்கம்:

இப்போது நடந்துள்ள பயங்கரவாத சம்பவம், அடுத்தடுத்த சில வாரங்களுக்குள் கோவை நகரை மட்டுமன்றி கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, தொழில், அரசியல் என பல்வேறு மாற்றங்களை உருவாக்கக்கூடும். 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் குண்டு வெடிப்புக்குப்பின் ஏற்பட்ட பல்வேறு சரிவுகளில் இருந்து கோவை நகரம் இப்போதும் முழுமையாக மீளவில்லை என்பதே உண்மை.

இந்திய அளவில் பம்ப் உற்பத்தி, கிரைண்டர் உற்பத்தி, பொறியியல் பொருள்கள் உற்பத்தி, வார்ப்புப் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்டவற்றில் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கு குண்டுவெடிப்பு சம்பவமும் ஒரு முக்கிய காரணம். அதேபோல, அப்பாவி இஸ்லாமியர்களுக்கு வாடகை வீடு கிடைக்காத சூழல் கொங்கு மண்டலம் முழுவதும் இருந்து வருகிறது.

திமுகவுக்கு பின்னடைவு:

இந்நிலையில், மீண்டும் பயங்கரவாத சம்பவங்கள் கோவையில் தலைதூக்குவது போன்ற தோற்றம் கோவை மாநகரின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கக்கூடும். கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் ஆளும் திமுக, கடந்த பேரவைத் தேர்தலில் கூட 10 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. திமுக ஆட்சியை பிடித்தாலும் கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 64 பேரவைத் தொகுதிகளில் 22 இல் மட்டுமே வெற்றிபெற்றது. தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்ட வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் திமுகவுக்கு 1967 முதலே இப்பகுதி தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது.

இப்போது கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை களம் இறக்கி திமுகவை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சிக்கு, இப்போதைய பயங்கரவாத சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

தொடர் குண்டுவெடிப்புக்குப்பின் கோவை மக்களவைத் தொகுதியில் 1999 முதல் பாஜக ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வாக்கு வங்கியைப் பெற்று வருகிறது. கன்னியாக்குமரியை அடுத்து கோவையில் பாஜக செல்வாக்கு பெற இச்சம்பவமே முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் இப்போதைய பயங்கரவாத சம்பவத்தின் தாக்கம் பாஜகவுக்கு கைகொடுக்கக்கூடும்.

முதல்வரின் நேரடி தலையீடு அவசியம்:

பொதுமக்களும், தொழில்முனைவோர்களும் நேரடியாகவும், திமுக அரசியல் ரீதியாகவும் பாதிக்கப்படும் இந்த பயங்கரவாத விஷயத்தில் இதுவரை முதல்வர் ஸ்டாலின் ஏன் மௌனம் காக்கிறார் என்பது தான் தெரியவில்லை. முதல்வேளையாக முதல்வர் ஸ்டாலின் கோவை நகருக்கு நேரடி பயணம் செய்து பொதுமக்கள், தொழில்முனைவோர்களின் பதற்றத்தை போக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது அவசர அவசிய பணியாகும்.

மேலும், தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை, கோவை பயங்கரவாத சம்பவத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளையும், குறிப்பாக கோவையில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரிகளையும் கூண்டோடு மாற்றி,  முழு விழிப்புடன் நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளை பணியமர்த்தாவிடில் திமுக அரசுக்கு 1998 இல் ஏற்பட்டது போல மீண்டும் ஒரு கரும்புள்ளி உருவாகக்கூடும்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசாகிய இருவருக்குமே உள்ளது.