அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பா.ஜ.க பந்த் அவசியமற்றது

– கே.பாலகிருஷ்ணன் பேட்டி

அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக்கத்தோடும், அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் பந்த் போன்ற போராட்டங்கள் அவசியமற்றது என்று சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சி.பி.எம் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கோவையில் அமைதியை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு கலெக்டர், ஐ.ஜி., டி.ஐ.ஜி உட்பட அதிகாரிகளை குற்றவாளிகளாக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது .

அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். நடந்த சம்பவத்திற்கு அவருக்கும் தொடர்பு உள்ளது என்ற அடிப்படையில், அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அதிகாரிகள் அலட்சியம், கடமை தவறியது என்று பார்க்கக்கூடாது. இந்த சம்பவம் ஒரு பெரிய குற்றப் பின்னணி கொண்ட சம்பவமாக இருக்கிறது. வேதாந்தா நிறுவனத்தின் கைப்பாவையாக அன்று இருந்த முதலமைச்சரும் செயல்பட்டதின் விளைவு தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவம். எனவே 14 பேர் மரணத்திற்கு காரணமாக இருக்கிறவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

கோவையில் கடந்த 23 ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அது விபத்தா அல்லது வெடி வைத்து தகர்க்கப்பட்டதா என்பதை விட, அன்று நடந்ததை விபத்தாக நாங்கள் பார்க்கிறோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் செய்திகளை பார்க்கும்போது அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால் கோவையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை உள்ளாகி இருக்கும் என்பது விசாரணையில் தெரிகிறது.

விபத்து நடைபெற்றவுடன் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் துரிதமாக கைது செய்திருப்பது பின்னணியை ஆய்வு செய்திருப்பது பாராட்டத்தக்கது.

நேற்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதில், இந்த சம்பவத்தில் பன்னாட்டு கூட்டணி சம்பந்தப்பட்டிருக்கும் சூழலில் இதனை தேசிய புலனாய்வு முகமை விசாரணை வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது நல்ல நடவடிக்கை.

இப்படியான சம்பவம் நடைபெறுவதற்கான முகாந்திரங்களை ஏன் உளவுத்துறை கண்டுபிடிக்க முடியவில்லை. உளவுத்துறையில் உள்ள குறைபாடுகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்
இந்தக் குறை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

என்.ஐ.ஏ பணியிலும் மந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த எதார்த்தத்தை என்.ஐ.ஏ ஒத்துக்கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அறிக்கை விட்டோம். அதன்படி மூன்று காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், உளவுத்துறை பலப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டிருப்பவர் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே அந்த மதத்தை ஒட்டுமொத்தமாக விரோதமாக பார்க்கக்கூடிய பார்வைக்கு இடமளிக்கக்கூடாது. எந்த ஒரு குற்றம் நடந்தாலும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏதோ ஒரு மதம் அல்லது சாதியை சார்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்த பிறகு அனைத்து ஜமாத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளன. எனவே கோவையில் மத அடிப்படையில் குற்றம் சாட்டப்படுவது, மதத் தீவிரவாதிகள் என்ற பெயரில் ஒரு மதத்தை குற்றம் சாட்டுவது போன்ற நிலைக்கு இடமளித்து விடக்கூடாது.

இந்த சூழ்நிலையில் வருகிற 31ஆம் தேதி பாஜக பந்த் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பந்த் தேவையா என்பதை அவர்கள் தான் யோசிக்க வேண்டும்.பந்த் நடத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? சம்பவம் நடந்தவுடன், அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசியப் புலனாய்வு முகமையிடம் தமிழக அரசு அந்த வழக்கை ஒப்படைத்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக்கத்தோடும், அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் பந்த் போன்ற போராட்டங்கள் அவசியமற்றது. ஒவ்வொரு கட்சிக்கும் அரசியல் இருக்கிறது அந்த அரசியலை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இன்று இருக்கக்கூடிய பதற்றமான சூழலில் அரசியல் செய்வதும் அரசியலுக்காக பந்த் செய்வதும் பயன் அளிக்காது. அது மேலும் மேலும் பதற்றத்தைத் தான் அதிகரிக்கும்.

அப்படியான சூழலுக்கு கோவையில் யாரும் இடம் கொடுக்கக் கூடாது. உயிரிழந்த நபர் போனில் வைத்திருந்த ஸ்டேட்டஸ் எல்லாம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்கள் அது விசாரணைக்கு தேவையா என்பதை காவல்துறை முடிவு செய்வார்கள். விசாரணை நடைபெறும் போது காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் இருந்து எந்த விதமான ஆத்திரமூட்டலுக்கும் இடம் கொடுக்கக்கூடாது.

இந்த பந்த் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசித்து வருகிறோம் எனக் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.