சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. பின்பு பெரும் தொற்றாக மாறி, உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி கொண்டு இன்னல்களை உருவாக்கியது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வூஹானில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் பரவலை முற்றிலும் ஒழிக்க சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், தீவிர பொது முடக்கத்தை அந்த நகரை சுற்றிய பல இடங்களில் சீனா அறிவித்துள்ளது.

ஹன்யங் மாவட்டத்தில் உள்ள 9 லட்சம் குடும்பங்கள் புதன்கிழமையிலிருந்து வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹன்யாங்கின் சுகாதார பணியகத்தின் மற்றொரு அதிகாரி, ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமுடக்கம் தொடரும் என்றும், அத்தியாவசியமற்ற அனைத்து வணிகங்களையும் மூடுமாறு கூறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அதேசமயம், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட், மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வுஹானில் செவ்வாயன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும், அங்கு இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும். தொடர்ந்து பரவலை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.