கோவையில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவு

கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பை தொடர்ந்து கோவையில் மூன்று காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்கள் அமைய உள்ளது.

கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம் கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும், மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில். காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும், மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கரும்புக்கடை பகுதியானது உக்கடம் காவல் நிலைய எல்லைக்குள் இருந்து வருகிறது. சுந்தராபுரம் பகுதியானது குனியமுத்தூர் காவல் நிலையம் எல்லைக்குள் உள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதியானது சாய்பாபாகாலனி மற்றும் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. தற்போது இந்த மூன்று பகுதிகளிலும் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதால் போலீசாரின் பணிச்சுமை குறைவதோடு, எந்தவித குற்றச்சம்பவங்கள் நடைபெற்றாலும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை துவக்க முடியும்.

இதே போல் சூலூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள நீலாம்பூர் பகுதியில் தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.