கோவையில் விபத்தில்லா பசுமை தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாநகர காவல் துறை மற்றும் கோவை மாவட்ட பூமி தன்னார்வ அமைப்பு இணைந்து தீபாவளி பண்டிகையையொட்டி மாநகரப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் பசுமை தீபாவளி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை லட்சுமி மில் சந்திப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழாவில் மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை துணை ஆணையர் மதிவாணன் மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்று தன்னார்வலர்களுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்தும், கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிய அறிவுறுத்தப்பட்டனர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி சாலைகளில் வாகனம் ஓட்டி வந்த பொதுமக்களுக்கு மாநகர ஆணையாளர் பசுமை தீபாவளி கொண்டாடும் வகையில் தீபாவளி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களுக்கு துணிப்பை, விதைப்பந்து கல்யாண் ஜுவல்லரி மற்றும் ராபர்ட் போஸ் நிறுவனங்களின் பரிசு கூப்பன்கள் கொண்ட கைப்பை வழங்கினார்.

விதிமுறையை பின்பற்றாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி அவற்றைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. அரசின் சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், வேகமாகச் செல்லும் பயணம் விபத்தை உருவாக்கி, குடும்ப உறவுகள் பாதிக்கும் நிலையும், பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்தும்.

விதிமுறை மீறுவதால் அபராத தொகை செலுத்தும் நிலை, ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும். கோவை மாநகரம் விபத்திலா நகரமாக பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாநகர ஆணையரிடம் எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் எழுதிய பொது அறிவு மற்றும் சாலை போக்குவரத்து சட்ட விதிகள், சொல்வதெல்லாம் உண்மை மற்றும் அற்புதமான சிறுகதைகள் உள்ளிட்ட 50 புத்தகங்கள் காவல்துறையால் தொடங்கப்பட்ட தெரு நூலகங்களுக்கும், ஆட்டோ நூலகங்களுக்கும் வழங்கப்பட்டது

கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பல இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காவல்துறையினருடன் கோவை மாவட்ட பூமி தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், விழிப்புணர்வு பிரச்சார ஒருங்கிணைப்பாளர்கள் நிகில், சரவணகுமார், பிரபு, கங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.