ஆர்.வி. கல்லூரியில் மாணவர்களுக்கான மேம்பாட்டு நிகழ்வு

டாக்டர்.ஆர்.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் மாணவர்களுக்கான மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். கோவை‌, ராமகிருஷ்ண மிஷன் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் நீலகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்படுத்தலுக்காக ஆங்கிலம் கற்றல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், ஆங்கில மொழி எளிமையான மொழி. மக்கள் பேசும் மொழிகளில் தேசிய அளவில் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக உள்ளது. கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கும் ஆங்கிலம் தெரிந்து கொள்ளத் தேவையான அடிப்படை திறன்களாகும்.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அனைவராலும் ஆங்கிலம் பேச முடியும். நாள்தோறும் செய்தித்தாள்கள் வாசித்தல், புத்தகங்கள் படித்தல், ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தல், ஆங்கில இணைய தளங்கள் பயன்படுத்தல், குழு விவாதங்கள் இவற்றின் மூலம் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே தைரியமாக ஆங்கிலம் பேச முடியும். கடினமான மொழி என்ற தவறான எண்ணம், பயம், வெட்கம் இவையாவும் ஆங்கிலம் பேசுவதற்கு தடைகளாகும். இம்மொழியை சரளமாக பேசத் தெரிந்தால் மட்டுமே நல்ல வேலை வாய்ப்பைப் பெற முடியும் என்று மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.