ராஜ்பவன் பொதுமக்கள் பவனாக மாறியது!

தமிழக ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஆளுநர் மாளிகை, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லம், ஆளுநர் மாளிகை அலுவலகங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன.

ஆளுநர் மாளிகையில், விசாலமான தர்பார் மண்டபமும் பசுமையான புல்வெளிகளுடன் கட்டடக்கலையமைப்புடன் கூடிய கட்டடங்கள் அமைந்துள்ளன. மத்திய & மாநில அரசு நிகழ்ச்சிகள், அலுவல் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன. இந்திய குடியரசுத் தலைவர், இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியப் பிரதமர் மற்றும் ஏனைய மிக முக்கிய உயர் பதவியில் உள்ளோருக்கான தங்கும் அறைகளும் உள்ளன. அற்புதமான விருந்து மண்டபமும் கலைப்பொருட்கள் கொண்ட கட்டடக்கலையமைப்புடன் கூடிய கட்டடங்களும் அமைந்துள்ளது. சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகை, மாநிலத்தின் அரசமைப்புச் சட்டத் தலைவரான தமிழ்நாட்டு ஆளுநரின் அதிகாரப்பூர்வமான இல்லம் ஆகும்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுநர் மாளிகைகளில் ஒன்றான சென்னையின் ஆளுநர் மாளிகை, சிறந்த நிர்வாகிகள் மற்றும் கைவினைஞர்களின் திறமைக்கு சான்றாக நிற்கும் கட்டடக்கலை, பண்பாட்டுத்தன்மை மற்றும் சூழலியல் தன்மை ஆகியவற்றில் தலைசிறந்த படைப்பாகும்.  இதன் பிரம்மாண்டமான கட்டடக்கலை 400 ஆண்டுகால பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இன்றும் கூட, பரபரப்பான நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தாலும், ஆளுநர் இல்லம் மட்டுமே அதன் வனச் சூழலைப் பாதுகாக்கிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மரங்களை பாதுகாப்பதுடன், பல வகையான பறவைகள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக திகழ்கிறது.

அதிகாரபூர்வ இல்லத்தின் வரலாற்று அடையாளத்தை 1640 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் காண இயலும். இது 1693 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டு கிழக்கு நோக்கி புதிய கட்டடம் அமைக்கப்பட்டது, இது மீண்டும் 1746 ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்களால் புதுப்பிக்கப்பட்டது. 1749 ஆம் ஆண்டில் ஆளுநருக்கு ஒரு புதிய பூங்கா இல்லம் அமைக்கப்பட்டது, இது பின்னர் அரசினர் தோட்டமாக அறியப்பட்டது.

ஆளுநர் வில்லியம் லாங்ஹோர்ன் 1670 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் கிண்டி வனப்பகுதியிலிருந்து உருவாக்கப்பட்ட தோட்டத்தில் கிண்டி தங்கும் விடுதியைக் கட்டினார். 1678 ஆம் ஆண்டில் லாங்ஹார்ன் வெளியேறியபோது, கிழக்கிந்திய நிறுவனத்துடன் ஏற்பட்ட சில பிரச்சினைகளை தொடர்ந்து, கிழக்கிந்திய நிறுவனத்தின் மெட்ராஸ் அரசுக்கு கிண்டி தங்கும் விடுதியை பரிசாக வழங்கிய சென்னையின் அப்போதைய தலைமை வணிகரான சின்ன வெங்கடாத்ரிக்கு சொத்தினை விற்பனை செய்தார்.

கிண்டி விடுதி 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் மைசூர் ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது. அதன் பின்னர், அது தனியார் விடுதி உரிமையாளர்கள் வசம் சென்றது. 1820 ஆம் ஆண்டில் தான், கிண்டி விடுதியை வாங்குவதற்கும் விரிவாக்குவதற்கும் பொறுப்பு வகித்த, ஆளுநர் தாமஸ் மன்றோ (“மெட்ராஸ் மாநகர விரிவாக்கத்திற்கான இயல்பான எல்லைக்கோடு, கிண்டி செல்லும் திசையில் அமைந்துள்ளது”) அதை அதிகாரப்பூர்வ இல்லமாக நிறுவினார்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுநர் மாளிகைகளில் ஒன்றான சென்னையின் ஆளுநர் மாளிகை, சிறந்த நிர்வாகிகள் மற்றும் கைவினைஞர்களின் திறமைக்கு சான்றாக நிற்கும் கட்டடக்கலை, பண்பாட்டுத்தன்மை மற்றும் சூழலியல் தன்மை ஆகியவற்றில் தலைசிறந்த படைப்பாகும்.  இதன் பிரம்மாண்டமான கட்டடக்கலை 400 ஆண்டுகால பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

ஆளுநரின் அலுவல் ரீதியிலான இல்லமாக, கிண்டி விடுதி மாறியபோது, தற்போதுள்ள கட்டடம் அமைந்துள்ள இடத்தில் ஆளுநர் குடியிருப்பு, குடியரசுத்தலைவருக்கான கட்டடம் மற்றும் தர்பார் மண்டபம் என ஒற்றை மாடியைக் கொண்ட மாளிகைகள் மூன்று இருந்தன, எல்பின்ஸ்டோன் பிரபு மற்றும் அவரது வாரிசுகள் பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களும் மேம்பாடுகளும் ஆளுநரின் இல்லத்தின் தற்போதைய மேம்பட்ட நிலைக்குப் பெரிதும் உதவின. 1946 ஆம் ஆண்டில், இந்த இல்லம் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஆனது.  மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ராஜ் பவன் (ஆளுநர் மாளிகை) என பெயரிடப்பட்டது.

ஆளுநரின் குடியிருப்பு, 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் பிரபலமான பண்டைய ரோமின் பல்லேடியன் கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆங்கிலேயர்கள், ஐரோப்பிய பாணியில் கட்டுவதற்கு  ஆளுநர் மாளிகை வளாகத்தில், குடியரசுத் தலைவருக்கான கட்டடமும் தர்பார் மண்டபமும் புதிதாக  சேர்க்கப்பட்ட பகுதிகளாகும். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஏனையS முக்கிய  பிரமுகர்கள் சென்னைக்கு வருகை புரியும் போது, அவர்கள் தங்குவதற்கு குடியரசுத் தலைவருக்கான கட்டடத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆளுநரின் சமூக மற்றும் பொது பணிகளுக்கான இடமாக தர்பார் மண்டபம் செயல்படுகிறது.

கிண்டி தோட்டம், மேலும் சில வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளின் தாயகமாகும். இங்குள்ள வெள்ளை மாளிகை மேற்கத்திய பாரம்பரியத்துடன் கூடிய இந்திய வடமொழி கட்டடக்கலையின் கலவையாகும். தங்குமிடங்கள், நூக் கட்டடம் (Nook) மற்றும் ஆளுநரின் செயலகம் ஆகியவை சமகால பயன்பாட்டிற்காக புதுப்பிக்கப்பட்ட வரலாற்று கட்டடங்கள் ஆகும். ஆளுநர் செயலகத்தின் அன்றாட அச்சுத் தேவைகளை நிறைவு செய்யும் பாரம்பரிய நினைவுச்சின்னமாக ஆளுநர் மாளிகையிலுள்ள அச்சகம் செயல்படுகிறது.

இருபத்தைந்தாண்டு நினைவு பூந்தோட்டம், நீள் உருண்டை வடிவிலான பூந்தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டம் போன்ற ஏராளமான அலங்கார தோட்டங்கள் ஆளுநர் மாளிகையின் வளாகத்தை அலங்கரிக்கின்றன. இருபத்தைந்தாண்டு நினைவு பூந்தோட்டத்தில் தேசிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆளுநர் மாளிகையின் நுழைவுவாயில் அருகே  நீரூற்றுகள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட சுவர்களைக் கொண்ட அலங்காரத் தோட்டம், கிண்டி தேசிய பூங்காவிலுள்ள அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை சித்தரிக்கிறது.

சென்னையிலுள்ள அழகிய கண்ணைக்கவரும் ஆளுநர் மாளிகை கடந்த காலத்திலிருந்தே, புகழ்பெற்ற ஒரு கட்டடக்கலை நினைவுச்சின்னமாகும். இது பழைய மெட்ராஸின் ஒருங்கிணைந்த பண்பாடு மற்றும் கட்டடக்கலையின் சிறப்பியல்புகளின் கம்பீரமான தோற்றத்தை தொடர்ச்சியாக நம் கண்களுக்கு காட்சியளிக்கும் கலைச்சின்னமாக விளங்குகிறது.

சென்னை ஆளுநர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு முதல் முறையாக கொலு கண்காட்சி அமைக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவினை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளுநரின் துணைவியார் லட்சுமி ரவி ஆகியோரால் (26.09.2022) அன்று திறந்து வைக்கப்பட்டது. ‘நவராத்திரி கொலு’, பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றது.

‘நவராத்திரி கொலு’ காண பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள ‘நவராத்திரி கொலு’ 01.10.2022 முதல் 05.10.2022 வரை நாள்தோறும் மாலை 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாணவர்கள் உட்பட பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது.

விருப்பமுள்ள பொது மக்கள் தங்கள் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச் சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. முதன்முறையாக, ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு’ ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு ‘முதலில் வருபவர்கள் முதலில் பார்வையிடலாம்’ என்ற முன்னுரிமையின் அடிப்படையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80 நபர்கள் வரை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

பார்வையிடும் நேரம் நான்கு கட்டங்களாக (Slots) ஒதுக்கீடு செய்யப்பட்டு (ஒரு கட்டத்திற்கு (per slot) 20 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது) மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தங்களுக்கான ஒதுக்கீட்டு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, பார்வையாளர்கள் மின்னஞ்சலில் வழங்கிய அசல் அடையாளச் சான்றுடன் ஆளுநர் மாளிகையின் இரண்டாவது நுழைவு வாயில் வழியாக பேட்டரி வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆளுநர் மாளிகை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கொலு கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர். நவராத்திரியை முன்னிட்டு இசை கச்சேரி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மனமகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர்.

ராஜ்பவன் வரலாற்றில் முதன் முறையாக பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு பொதுமக்கள் பவனாக மாறியது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அறிவுறுத்தலின்படி, ராஜ்பவனில் வைக்கப்பட்டுள்ள கொலுவை காண்பதற்கு அனுமதிக்கப்பட்டதன் மூலம் மாணவ, மாணவியர்கள், ஏழை, எளியோர் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் மிகவும் மகிழ்வுற்றதாகவும், ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் ராஜ்பவன் மக்கள் ராஜ்ஜியம் கொண்ட பகுதியாக காட்சி அளித்தது.

ராஜ்பவனில் மாணவச் செல்வங்களின் அறிவுத்திறன் மேம்பட மாணவர்களிடையே கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டன. சமுதாயத்தில் சிறந்த வகையில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் ஆர்வலர்களையும், சமுதாய பணியில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசுகள் முதன் முறையாக ஆளுநர் ரவி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ராஜ்பவன் வரலாற்றிலேயே முதன் முறையாக இதுபோன்ற சமுதாய மேம்பாட்டு பணிகள் நடைபெறுவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதேப் போன்று ராஜ்பவன் பொதுமக்களின் பார்வைக்கு விரைவாக திறக்கப்படும் என்ற தகவலும் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆயத்தப்பணியினை ஆளுநர் மாளிகை சார்பாக மேற்கொண்டு வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. இது போன்ற சிறந்த பணிகள் ராஜ்பவனில் தொடரட்டும், ஆளுநரின் மக்கள் நலப்பணிகள் வெல்லட்டும்.