
உலக அளவில் உள்ள பொருளாதார மந்தம், அடுத்த ஆண்டு வரப்போகும் பொருளாதார சிக்கல்கள், டாலர் மதிப்பு சரிகிறது என்றாலும் ரூபாய் மதிப்பு குறையவில்லை என்று சொல்வது, சீனாவில் பொருளாதார சிக்கல், ரஷ்யா உக்ரைன் போரினால் உலகப் பொருளாதாரம் பாதிப்பு என்று பல கருத்துகள் சொல்லப்பட்டாலும், இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்பது தான் பொதுக்கருத்தாக தெரிகிறது. கிட்டத்தட்ட வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் பட்டியலை நோக்கி இந்தியா பயணப்படுகிறது என்றே எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் உலக அளவிலான பட்டினி குறியீட்டு பட்டியல் ஒன்று வெளி வந்திருக்கிறது. அயர்லாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த இரண்டு அமைப்புகள் எடுத்த சர்வே விவரங்கள் படி இந்தியா, 107 என்ற இடத்திற்கு, அதாவது மோசமான இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 0, 1, 2 என்று வரிசையாக வருவதில் நூற்றுக்கு மேல் வருவது என்பது நிலைமை மோசம் என்பதை குறிப்பிடுவதாகும். இதற்கு ஆதாரமாக அவர்கள் நான்கு காரணங்களை அளவீடுகளாக கொண்டு இருக்கிறார்கள்.
ஒன்று குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, இரண்டாவது குழந்தைகளின் எடை வளர்ச்சி, மூன்றாவது வளர்ச்சி குறைவு, நான்காவது இறப்பு விகிதம். கடைசி இரண்டு அளவீடுகளில் முன்பை விட கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றினாலும் நம்மைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. பொருளாதாரத்தில் நம்மை விடத் தாழ்ந்து உள்ள இலங்கை அறுபத்தி நான்காம் இடத்திலும் பங்களாதேஷ் எண்பத்து நான்காம் இடத்திலும் பாகிஸ்தான் தொண்ணூத்தி ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. ஆனால் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது.
நகரங்களை நோக்கி வேலைவாய்ப்பு தேடி செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதே காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகம் உள்ள இந்திய நாட்டில் வேலைவாய்ப்பு என்பது குறைந்து கொண்டே வருவதையும் கவனிக்க வேண்டும்.
இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட பரந்த பல்வேறு சமூக சிக்கல்கள் உள்ள நாடுகளில் இதுபோன்ற சர்வேக்கள் உண்மைத் தன்மையை முழுமையாக பிரதிபலிக்காது என்றாலும் இவற்றை முழுக்க முழுக்க ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக நாம் 2020 இல் 94 வது இடம், 2021 இல் 101 வது இடம் என்று பின் தங்கியே வந்திருக்கிறோம். எனவே இது குறித்து ஒரு ஆய்வு செய்து செயல்படுவது மிகவும் முக்கியம்.
அடுத்த ஆண்டு பொதுவாகவே உலகப் பொருளாதார நிலை இன்னும் கீழே போகும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ரஷ்யா உக்ரைன் போர், உலகில் உற்பத்தி சாலை எனப்படும் சீனாவின் பொருளாதார மந்தநிலை, பருவநிலை மாற்றம், கொரோனா நோயின் பின்விளைவுகள் என்று இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை சிறிது சிறிதாக ஏற்றி வருவது பொருளாதாரம் குறித்த ஒரு அச்ச நிலையைத் தான் காட்டுகிறது. இந்த நிலையில் இந்த பட்டினி குறியீட்டை கூட ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பொதுவாகவே பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இருக்கும் இடைவெளி என்பது அதிகரித்து கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. நகரங்களை நோக்கி வேலைவாய்ப்பு தேடி செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதே காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகம் உள்ள இந்திய நாட்டில் வேலைவாய்ப்பு என்பது குறைந்து கொண்டே வருவதையும் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் இந்தியா போன்ற நாட்டின் முதல் சொத்து என்பது அதன் மக்கள், அவர்களின் உடல்நலம் தான். அதற்கு ஏதாவது பங்கம் ஏற்படும் என்றால் நாட்டின் உற்பத்தி, அமைதி, பொருளாதாரம் தொடங்கி, எல்லாமே பாதிக்கப்படும். அது எவ்விதத்திலும் ஒரு நாட்டிற்கு நல்லதல்ல.
எனவே இந்த பட்டினி குறியீட்டு பட்டியலில் நாம் அக்கம்பக்கத்தில் உள்ள குட்டி நாடுகளை விட ஏன் பின்தங்கி உள்ளோம், எங்கே ஊட்டச்சத்து குறைவு, எங்கே வளர்ச்சி விகிதம் குறைவு என்பதை கண்டறிந்து சீர் செய்ய வேண்டும். கண்டிப்பாக நம்மால் சீர் செய்ய முடியும்.
ஏனென்றால் இந்தியாவில் எவ்வளவு பேர் சொகுசு கார்கள் வைத்திருக்கிறார்கள், உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்கள் என்பதில் நமக்கு பெருமை இல்லை. ஒவ்வொரு இந்தியனும் குறைந்தபட்சம் நல்ல சத்தான உணவு உண்டு நிறைந்த வயிறுடன் இரவு படுக்கச் சென்றால் அதுதான் நமது நாட்டுக்கு பெருமை ஆகும்.