பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் மத்தாப்பாய் ஜொலித்த தீபாவளி கொண்டாட்டம்

பி.எஸ்.ஜி அறக்கட்டளையினால் நடத்தப்பட்டு வரும் மாணவர் இல்லத்தில் நிர்வாக குழுவினரின் சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளியில் உள்ள மாணவர் இல்லத்தின் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த இல்லத்தில் தற்போது உள்ள 176 மாணவர்களுக்கும் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் சார்பில் புத்தாடை, காலணிகள், பட்டாசு வழங்கப்பட்டது.

இரவு சிறப்பு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.

மாணவர்களுடனான இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள், பி.எஸ்.ஜி கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அரவணைக்கும் பி.எஸ்.ஜி மாணவர் இல்லம்:

1995 ஆம் ஆண்டு பி.எஸ்.ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலராக இருந்த ஜி.ஆர் கார்த்திகேயன் அவர்களால் மாணவர் இல்லம் நிறுவப்பட்டது.

தாயையோ தந்தையையோ அல்லது இருவரையும் இழந்து படிப்பையும் வாழ்க்கையையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமல் சிரமப்படும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவும் வண்ணம், தமிழ் வழி கல்வியை ஆறாம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளி மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

தனித்தேர்வு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் இல்லத்திற்குள் புதிதாக மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இங்கு உள்ள மாணவர்களுக்கு மனதளவில் ஒரு இல்லத்தில் அன்புடன் வாழ்வது போல சூழலையும், மருத்துவ வசதிகளையும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறக்கூடிய வாய்ப்புகளையும் மாணவர் இல்லம் வழங்குகிறது.

கல்வியில் சிறக்கும் மாணவர்களுக்கு பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பையும் இந்த மாணவர்களுக்கு அறக்கட்டளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.