கோடை வெயிலை சமாளிக்க போலீசாருக்கு சோலார் தொப்பி

ஆண்டு முழுவதும் விடுமுறையின்றி தொடர்ந்து பணியாற்றும் துறைகள் சில மட்டுமே உள்ளது. அதில் காவல்துறை முக்கியமானதாகும். விடுமுறையின்றி ஆண்டு முழுவதும் காவல்துறையினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாமலும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் காவல்துறையினர் சிறப்பாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

காவல்துறையில் முக்கியமானது போக்குவரத்து காவல் பணியாகும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மழை, வெயில் என பார்க்காமல் தினசரி நாள் முழுவதும் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னரே கடும் வெயில் அடித்து வருகிறது.

மரங்கள் அழித்தல், புதிய மரங்கள் ஏற்படுத்தாதிருத்தல் போன்றவையே இதற்கு முக்கிய காரணமாகும். காலை 8 மணி முதலே வெயிலின் தாக்கம் ஆரம்பிக்கிறது. வெயில் சமயங்களில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தொப்பிகளை அணிகின்றனர்.

இந்த நிலையில், மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசார், வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சோலார் தொப்பிகளை வழங்கியுள்ளனர்.

இந்த தொப்பி அணிந்து பணியாற்றுவதன் மூலம், வெயிலின் சூடு, வெயிலின் தாக்கம் தலைக்கு வராது. போக்குவரத்து காவலர்களுக்கு இந்த சோலார் தொப்பி பயனுள்ளதாக உள்ளது. இதுகுறித்து தி கோவை மெயில் பத்திரிகைக்கு மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் சரவணன் கூறியதாவது: கோடை வெயிலை தணிக்கும் வகையில் கோவையிலுள்ள போக்குவரத்து காவல் துறை மற்றும் குதிரை படை வீரர்களுக்கும் இந்த தொப்பி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொப்பியானது இயற்கையாக தாவரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களிலிருந்து தாயரிக்கப்பட்டது. இத்தொப்பியை பயன்படுத்துவதன் மூலம் உடல் வெப்பநிலையை சீராக்கும் மற்றும் வியர்வை அளவினை கட்டுபடுத்தும்.
மேலும் அவர் காவலர்களுக்கு சோலார் தொப்பி மட்டும் இல்லாமல் இந்த கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க கண்களுக்கு “கூலேர்ஸ்” மற்றும் நீர்பானங்களும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

– பாலாஜி