கொங்குச்சீமை செங்காற்று – 6

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

 

– சூர்யகாந்தன்

 

நமச்சிவாயம் தன்னுடைய மொபட்டில் தெரு வளைவில் திரும்பி, தெற்குநோக்கிப் போயிக்கொண்டிருந்தான். பின்னால் ஒருவர் உட்கார்ந்திருந்தார்..!

“….ஆரு அது புதுசா இருக்குது? மாசய்யன் மகனோட வண்டியில் போறது?”

“அது அந்தப் புரோக்கரப்பா! அவன்தா இந்த ரெண்டு மாசமா விடாம வந்து, இந்தப் பக்கத்துப் பூமிகளெ வெலக்கெரயம் பண்ணறதுக்கு நம்பவுமே பிரயத்தனப் படுறானப்பா..! அவனே உனக்குத் தெரியாதா? எடையபாளையத்துப் பிரிவுக்கிட்டே டயர்க விற்கிற கடை வெச்சிருந்தானே…!”

…” அப்பிடியா? நான் எதுக்கு அவங்கூடப் பொழங்குறேன்…? எனக்குப் பொழக்க வாசியில்லை..”

“….எனக்கும் நம்ம வடக்காலூட்டு ராக்கிதான் வந்து சொன்னான். உங்குளுதும் காடு விக்கிறதுன்னாச்சொலுங்க! நா ஆளுக் கொண்டாறேன்! இங்கியே பக்கத்தால ஊர்லயே இருக்குறான்னு இதோ இப்ப போனானே டபுள்ஸ்ல உக்காந்துட்டு! அவனெத்தான் சொன்னான்!”

“….ச்செரி….! ச்செரி…!”

அரச மர நிழலில், ஐந்தாம் கரம் ஆட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், ஊர் நிலவரம் உரையாடலில் உலா வந்தாயிருந்தது.

மரக்கிளையில் அமர்ந்து கரைந்து கொண்டிருந்த காகங்களை, ஒருவர் தனது கைவிரல்களை வில் போல் வளைத்து மிரட்டிக் கொண்டிருந்தார்.

“…போகுதுகளான்னு பாரு சனியனுக! நானும் எத்தனையோ மெரட்டிப்பாக்குறேன்..! இந்த மரத்தைவுட்டு நகுருவனாங்குதுக…”

“…உங்க மெரட்டுகளையெல்லாம் கண்டு, அதுக அக்கட்டால போகாதுக மாமா! ஒண்டி வில்லுக கெடச்சுக் கொண்டாந்து மேல தூக்கிக் காட்டுனாத்தான் பயப்படும்…”

“ஆமாம்ங்கிறே! இருக்கட்டும். எவனாச்சும் மாட்டுக்காரப் பசங்க வந்தானுகன்னா கேட்டு வாங்கி, இந்தக் காக்காய்களை ஒரு கை பாத்துரவேணும்…”

“…மாமனவிகளுக்குக் காக்காயிக பேர்ல கடுப்பாயிடுச்சுப் போல இருக்குது…”

“அது கெடக்கட்டும் சின்னு! மாசய்யன் மகன் நமச்சிவாயம் வந்து என்னையுந்தான் கேட்டான்! நல்ல பார்ட்டி இருக்குது! நாம எல்லோரும் ஒண்ணாவேகூடப் பேசி முடிச்சு ஓர்சலான வெலைக்குக் குடுத்தர்லாம்னுதா கேட்டேன்..”

“……. ….. …..”

“ஏனப்பா…பேச மாடேங்குரே…?”

….”அதுக்கில்லைங்க! அவன் எதுக்கு நமக்கு நடுவுல பூந்துட்டு எடத்துக்காரனாட்டம்! அவனுக்குத் தெரிஞ்சதுக நம்முளுக்குத் தெரியாமயா போயிடும்…?”

“பின்ன என்னுங்க பின்னே…?”

“நாம நம்ம சவுகரியத்துக்கு நம்முளுக்குத் தோதுப்பட்டாக்க குடுக்கிறது! இல்லீனா கம்முனு கெடந்திட்டுப் போவுது..! அந்த நிலத்தே ஆரு வந்து தூக்கிட்டு ஒடப்போறாங்க…?”

கோபங்கலந்த தனது அபிப்ராயத்தைக் கருப்பண்ணன் இப்படி வெளியிட்டார்.

அதில் நியாயம் நிறைந்திருப்பதை அங்கிருந்தோரின் முகங்களும் பிரதிபலித்தன.

“உங்களோட ஒசனையில் தப்பில்லைங்க! பின்னெ நமச்சிவாயன் தோதில்லாமயா இந்த அலைச்சல் அலையிறான்? எல்லாம் லாபத்தோடதான்! அப்பிடியில்லாமயா, அடுத்தவங்க நெலங்களை விற்கச்சொல்லி இப்பிடி மொனையிறவன் அவிக நெலத்தை விற்காமயே போட்டு வெச்சிருக்கிறான்! பாத்தீங்கல்ல…”

“தெரிஞ்சதுங்க! அவிக பூமி, அய்யன்காரர் பேர்லயல்ல இருக்குது! மக்கமாருகளுக்குப் பிரிச்சுக் கொடுத்தா மூணு பங்காகப் போயிடும். இவனென்ன பண்றானுங்கனா… வித்து வர்ற பணத்தை மூணு பேர்த்தும் பேர்லயும், பேங்குல போட்டுட்டு அப்பிடிங்கிறானுங்க அவிக அய்யங்கிட்டே…

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததில் பிடிப்பு ஏற்படவே ஐந்தாம் கரம் ஆட்டத்திலிருந்து விடுபட்டு இந்தப் பக்கம் நகர்ந்து வந்து உட்கார்ந்தான் ஆறுமுகம்.

“…மாசய்யனும்கூட நெலத்தை விக்கிற ஓசுனையிலதானுங்க இருக்குது.”

“ஓஹோ! அதுமு அப்பிடியா?”

“ஆமாங்க! நடுமகன் சுப்பையனுக்கும் கண்ணாலக் காரியம் அனுசுக்கு வரும்போல இருக்குது..! அதுக்கும் பொறகு காடுகரைய விக்கிற எற்ப்பாட்டெப் பண்ணுமுங்க…”

குக்கிராமம் எனினும், சிற்றூர் எனினும் ஒரு தெருவின் எந்த வீட்டில் எத்தகு நிலவரம் நிலை கொண்டுள்ளது என்பதை அந்த மக்கள் ஓரளவுக்கு அறிந்தது தான் வைத்துள்ளனர் எனும் உண்மையை அறிந்துகொள்ளாத காகங்கள் கிளைகளில் அமர்ந்தபடி மேலும், கீழும் பார்த்தவாறிருந்தன.

வெய்யில், வான்வெளியில் மேலேறிக் கொண்டிருந்தது.

“ச்…செரி! இந்த ஊரோரத்துக் காட்டை வித்துட்டாலும் அவிகளுக்குத் தெற்க்கத்திக்காடு இருக்குமல்லலோ..”

“ம்…ம்…! அது இருக்குமுங்க…!

“…மலையடிவாரத்துல இருக்குதே அதையத்தானே நீ சொல்றே..?

“அமாங்கண்ணா! எட்டிமடை போற கணுவாய்க்கும் வடபுறமா அதுவும் நாலஞ்சு ஏக்கராச்சேரும்…!”

“எனக்கும் தெரயுமுங்க! சோளம் மம்மேனியா அந்தக் கட்டுல வெளையுமுங்க! மழ கொறவாப்பேஞ்சாலும்வெளைச்சல் எச்சாவே குடுக்குமுங்க…!

“ஏன்னா! அது அமஞ்சிருக்குற ஜாகாவு அப்பிடியாப்பட்டதுங்க…”

“பின்னெ! நீங்க சொல்றது வாஸ்தவமான கருத்துங்க! காத்தால நாலு நாலரை மணிக்கு அங்கெ வீசுமுங்குளே ஒரு குளிர் காத்து. அது போதுமுங்க பூமியேக் குளிர்ச்சி பண்ணுறதுக்கு.

“….ஆமானப்பா! பொழுது மேற்கு மலைய போயி சரிஞ்சதுமே இந்த மலைகள்லெ குமியுமே மேகக்கூட்டங்க! அது ராவுப் பூரா, அடிவாரக் காடுகலெப் போர்வையில் போர்த்தி வெச்சுப் பாதுகாத்தாப்ல நின்னுருக்கும்! பொறகு கெழக்கெ பொழுது கௌம்பி வந்து எட்டரை மணிக்குப் பிற்பாடு தான் கொஞ்சங் கொஞ்சமாக நெஞ்சும் அந்த மேகங்க”

“அந்த ஈரப்பதம் தானுங்க… மலைமாரி பெஞ்சு குடுக்குற பலனை இந்தப் பூமிகளுக்கு காலமுட்ட நாளும் குடுத்துட்டே வந்திருக்குங்க…”

இவர்களின் கவனத்தைத் திருப்பும் படியாக அப்போது டெம்போ ஒன்று ஹாரன் ஒலித்தபடி அந்தத் தெரு வழியே வடக்கு நோக்கிச் சென்றது…! ஊருக்கு வடபுறமிருந்த தோட்டத்தை குத்தகைக்குப் பிடித்து பண்ணையம் நடத்தும் ‘புல்லட் சாமி’ யின் டெம்போ தான் அது…!

(தொடரும்)