ஆர்.வி. கல்லூரியில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு

காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் ‘பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்வு’ நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் திருமதி.இரா.கோகிலா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். காரமடை, அரசு மருத்துவமனையின் சுகாதார செவிலியர் மங்கையர்கரசி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வும் தடுப்பு முறைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், இன்று மாணவ, மாணவிகள் இடையே செல்ஃபோன் பயன்பாடு என்பது மிக அதிகமாக உள்ளது. செல்போனில் நல்லதும் உண்டு. தீயதும் உண்டு. பெரும்பாலும் தீயவைகளை பார்த்து மாணவர்கள் அதிகமாக கெட்டுப் போகின்றனர். நமது மனது குதிரையைப் போல தறிகட்டு ஓடக்கூடியது. குதிரையை எப்படி கடிவாளம் போட்டு நிறுத்துகிறோமோ அதே போல் நம் மனதை அறிவு என்ற கடிவாளம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வுலகில் நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைக்கு வன்மை குணம் பெற்ற ஆண்கள் பெரிதும் காரணமாய் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆணும் தன் அம்மா, அக்கா, தங்கை இவர்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அதே போன்று மற்ற பெண்களையும் நினைத்தால் பாலியல் வன்கொடுமை குறையும்.

படிக்கும் வயதில் பெண்கள் தங்கள் எண்ணங்களை சிதறவிடாமல் தவிர்த்தால் பாதுகாப்பாக வாழ முடியும். பெண்கள், ஆண்கள் யாராக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெற்றோரின் நிலையை நினைத்து படிக்கும் இடத்திலும், வேலை பார்க்கும் இடத்திலும் ஒழுக்கத்தோடு நடந்து கொண்டால் எந்த துன்பமும் ஏற்படாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா கடமைகளையும் தவறாமல் செய்து விடுகின்றனர். ஆனால் பிள்ளைகள் தங்கள் கடமையை மறந்து தங்களுக்குள் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால் பாலியல் வன்கொடுமை அதிகரிக்கிறது.

இந்த உலகத்தில் பெண்கள் சாதிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஒரு பெண் நினைத்தால் வீட்டையும், நாட்டையும் உயர்த்தவும் முடியும். தாழ்த்தவும் முடியும். எனவே பெண்கள் சின்னச்சின்ன இன்பங்களில் தங்களையும், தங்கள் வாழ்க்கையையும் அழித்துக் கொள்ளாமல் ஒழுக்கத்தோடும், பாதுகாப்போடும் வாழ வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.