கோவையில் ஒரேநாளில் 5 லட்சம் பேர் தீபாவளி ஷாப்பிங்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் ஒப்பணக்கார வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பொதுமக்களின் கூட்டத்தை சீர்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒப்பணக்கார வீதியில் ஏற்படுத்தப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி கண்காணித்தார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தீபாவளிக்கு பொதுமக்கள் கோவை மாநகருக்குள் சிரமம் இல்லாமல் வந்து செல்ல வசதியாக மாநகர போலீசார் சார்பாக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். பாதுகாப்பு பணியில் மொத்தம் 750 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ் புரம் ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 5 லட்சம் பேர் வந்துள்ளனர்.

அதேபோன்று இந்த வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் குறைக்க ஒரு சில வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தியும், சாதாரண உடைகளில் 14 தனிப்படை போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். மேலும் உயர் கோபுரங்கள் அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது.

2 துணை கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபாவளிக்காக தீயணைப்பு, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க, இரவு கடைகளில் விற்பனை நேரத்தை நீட்டிக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு வர்த்தக நிறுவனங்களிடம் பேசி உள்ளோம்.

பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். திருட்டு சம்பவங்களை தடுக்க பூட்டப்பட்ட வீடுகள் கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.