பேறு கால ஈறு வீக்கம் – கவலைப்பட வேண்டுமா?

கர்ப்பிணி பெண்கள் 60 % முதல் 70% வரை கர்ப்பகால ஈறு அழற்சியை அனுபவிப்பதாகவும், இதனால் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் தாயின் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என பி.எஸ்.ஜி மருத்துவமனையின் பல் ஈறு மற்றும் இம்பிளான்ட் சிகிச்சை நிபுணர் டாக்டர் நிவேதிதா கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நீங்கள் ஒரு அம்மாவாக போகிறீர்கள் என்றால், உங்கள் கர்ப்பத்துடன் வரும் உற்சாகத்தையும் பெற்றோருக்குரிய நடுக்கத்தையும் எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் வீங்கிய ஈறுகள் மிகவும் பொதுவானவை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தூக்க கலக்கம் முதல் மனநிலை மாற்றங்கள் வரை, கர்ப்பத்துடன் தொடர்புடைய ஹார்மோன்கள்- ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் 10 மற்றும் 30 மடங்கு அதிகரிப்பது இயல்பானது. உங்களது உடல் வளர்ந்து வரும் குழந்தையை பராமரிப்பதில் பிஸியாக இருக்கும்போது அதிகரிக்கும் இரத்த ஓட்டம் ஈறுகளில் வீக்கம் ஏற்படுவதற்கான நேரடி காரணமாக திகழும்.

கர்ப்ப ஈறு அழற்சி (Pregnancy gingivitis) புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனின் அதிகரிப்பால், பற்களில் பாக்டீரியா உருவாகுவதை எளிதாக்குகிறது. ஈறுகள் கூடுதல் மென்மையாகவும், வீக்கமாகவும், சிவப்பு நிறமாகவும் காணப்படும். குறிப்பாக நீங்கள் பிரஷ் மற்றும் ஃப்ளோஸ் செய்யும் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம். கர்ப்ப ஈறு அழற்சி இரண்டாவது மற்றும் எட்டாவது மாதத்திற்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

கர்ப்ப ஈறு அழற்சியை நிர்வகிப்பது மிகவும் முக்கியம். இல்லையேல், துணை திசு எலும்புகளின் பற்களின் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்து இறுதியில் பல் இழப்பை ஏற்படுத்தும்.

மேலும், கர்ப்பிணி பெண்கள் சிலருக்கு ஈறுகளில் “சிவப்பு கட்டி” அல்லது “அதிகப்படியான வளர்ச்சி” உருவாகிறது. அதுவும் பொதுவாக மேல் பற்களுக்கு அருகில். இவை கர்ப்பக் கட்டிகள் (Pregnancy tumour) என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் இவை புற்றுநோயோ அல்லது தொற்றோ அல்ல. இது மிகவும் சாதாரணமானது. பெரும்பாலானவை குழந்தை பிறந்த பிறகு மறைந்துவிடும், இல்லையென்றால் பல் மருத்துவரைத் தொடர்பு கொண்டு அதை அகற்ற வேண்டும்.

அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், 60% முதல் 70% வரை பெண்கள் கர்ப்பகால ஈறு அழற்சியை அனுபவிக்கின்றனர். உங்கள் குழந்தையின் ஆரோக்கியம், உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படலாம். எனவே கர்ப்பம் முழுவதும், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது நல்லது. இவற்றை புறக்கணிப்பதால், குறைப்பிரசவம் (Preterm labor) முதல் குறைந்த பிறப்பு எடையுள்ள குழந்தைகள் (Low-birth weight infants) பெறுவதற்கு 7 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வாய்வழி பராமரிப்பு குறிப்புகள்:

1. பிரஷ் மற்றும் ஃப்ளோஸ் – இரண்டு நிமிடங்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறை!

2. ஈறுகளை மசாஜ் செய்து சுத்தம் செய்ய மென்மையான நைலான் முட்கள் கொண்ட பிரஷ் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். அவை ஈறுகளையோ அல்லது வேர் மேற்பரப்பையோ காயப்படுத்தாமல் இருக்கும்.

3. தினசரி அல்லது அவ்வப்போது உப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீருடன் (1 தேக்கரண்டி: 1 கப்) வாய் கொப்பளிப்பது வீக்கத்தை அமைதிப்படுத்தி, எரிச்சலடைந்த ஈறுகளை குணப்படுத்த உதவும்.

4. ஈறுகளில் இரத்தம் வருவதை கவனியுங்கள்! புறக்கணிக்காதீர்கள்!

5. உங்கள் ஈறு ஆரோக்கியத்தை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்,

6. ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இனிப்புகளைத் தவிர்க்கவும்.

7.புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் கூடாது.

8. நினைவில் கொள்ளுங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் பல் மருத்துவரை அணுகவும்!

உங்கள் வாழ்க்கையின் இந்த அற்புதமான நேரத்தை நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் சிறப்பு கவனம் செலுத்துவது கர்ப்பஈறு அழற்சியின் விளைவுகளை குறைக்க உதவும். வாழ்நாள் முழுவதும் பொது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.