கொங்குநாடு கல்லூரியில் பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளைப் போற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள சிந்தனைக் கவிஞா் முனைவா் கவிதாசன் அறக்கட்டளையின் பன்மொழிப் பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா கல்லூரிக் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கோவை சரக, காவல்துறை துணைத் தலைவா் முத்துசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவா்தம் உரையில், ”மேதகு அப்துல் கலாம் இந்த மண்ணையும் மொழியையும் நாட்டையும் நேசித்தவா் என்றும் மதங்களைக் கடந்த மாமனிதா் என்றும் புகழாரம் சூட்டினார். எளிமையும் அனைவருடனும் இனிமையாகப் பழகும் பண்பும் பிறரைப் பற்றிய புறங்கூறலுக்குச் செவிசாய்க்காத திறமும் கலாம் அவா்களின் தனித்தன்மைகள் என்றும் அவா் இளைய சமுதாயத்துக்குக் கூறிய கருத்துகளை இளைஞா்கள் பின்பற்றி வெற்றியடைய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் அறக்கட்டளையின் நிறுவனரும் கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவருமான சிந்தனைக் கவிஞா் கவிதாசன், கல்லூரியின் முதல்வா் லச்சுமணசாமி வாழ்த்துரை வழங்கினர்.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைக்குழுவின் பொருளாளா் மருத்துவா் பரமசிவன் தலைமையுரையாற்றினார்.

புதிய நம்பிக்கை என்னும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி மாணவன் ராபின் ஜோஷ்வா முதல் பரிசையும் கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவன் வெங்கடேஷ் இரண்டாம் பரிசையும் கோவை, அரசு சட்டக் கல்லூரி மாணவி சுமித்ரா மூன்றாம் பரிசையும் பெற்றனா்.