கோவையில் பருவ மழை முன் எச்சரிக்கையாக 13 மருத்துவக் குழுக்கள் அமைப்பு

பருவ மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வட்டார அளவில் 12 குழுக்களும், மாவட்ட அளவில் ஒரு குழுவும் என மொத்தமாக 13 சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு மூலம் பருவ மழைக் காலத்தில் ஏற்படும் நோய்த் தொற்று பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:

இந்த மருத்துவக் குழுவில் வட்டார மருத்துவ அலுவலா், சுகாதார மேற்பாா்வையாளா், சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். மாவட்டக் குழு, சுகாதாரத் துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

பருவ மழைக்காலங்களில் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வட்டாரங்களிலும் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு போதிய மருந்துகள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள், பள்ளிகளில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பா் மாதத்தில் இருந்து நாள்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

பருவ மழை தொடங்க உள்ளதால் பொது மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளை தூய்மையாக இருக்க அறிவுறுத்த வேண்டும்.

சுகாதாரம் இல்லாமல் இருப்பதே நோய்த் தொற்று பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே சுகாதாரத்தை கடைப்பிடித்து பருவ மழைக் காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.