கோவையை உலகின் சிறந்த தொழில் நகரமாக மாற்ற வேண்டும்

– தமிழக அரசுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கோரிக்கை

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகத்தின் மிகச்சிறந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் பகுதியாக கோவை மாற்ற வேண்டும் எனவும், அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் தமிழக அரசிடம் இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை தலைவர் ஸ்ரீராமுலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தின் மேற்கத்திய பகுதியான கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி, தமிழகம் மட்டுமல்ல இந்தியாவினுடைய தொழில் வளர்ச்சிக்கு அதிக பங்கு ஆற்றும் பகுதியாகும்.

தமிழகத்தின் வளர்ச்சியில் மிகச்சிறந்த பங்கு வகிக்கும் கோவை, பலதரப்பட்ட தொழில் கட்டமைப்புகள் கொண்ட பகுதியாகும், இன்ஜினியரிங், பஞ்சாலைகள், ஆடைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வாகனங்கள், கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி நிறுவனங்கள், தங்க நகைகள் செய்தல் போன்ற பல விதமான தொழில் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மாவட்டம்.

ஆனால் கோவையின் கட்டமைப்பு வசதிகள் சரியாக பேணப்படவில்லை. கோவை எப்பொழுதுமே அதனுடைய தொழிலதிபர்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் தங்கள் சொந்த முயற்சியினால் அபிவிருத்தி செய்து முன்னேறி வருகிறார்கள். இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தமிழக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் பல வேண்டுகோள் அளித்திருக்கிறது. கோவையின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்கும் முதன்மையான நிறுவனமாக இந்திய தொழில் வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது.

தொழில்முனைவோர்கள் பலநாட்டிலிருந்து கோவைக்கு வந்து முதலீடு செய்ய, கோவை பகுதி தொழில் செய்வோருக்கும் வியாபாரம் செய்வோருக்கும் மிகச்சிறந்த சிறப்பிடம் ஆக இருக்க அந்தத் தகுதியை வளர்க்க இந்திய தொழில் வர்த்தக சபை சில கோரிக்கைகளை அரசுக்கு வைத்து அதை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக கோவை மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம், அவிநாசி சாலை மேம்பாலம், அத்திக்கடவு – அவிநாசி திட்டம், பில்லூர் திட்டம், எல் & டி பைபாஸ் விரிவாக்கம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என இதுபோன்ற திட்டங்கள் பல இருக்கிறது. இவை அரசின் கவனத்திலும் இருக்கிறது ஆனால் பல காரணங்களால் விரைவாக செயல்பட இயலாமல் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதியின் வளர்ச்சி தடைப்படுவதுடன், வெளிநாட்டில் உள்ளவர்களும் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களும் இந்தப் பகுதிக்கு வந்து தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றனர்.

இந்தத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டால் கோவை பகுதி இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் மிகச்சிறந்த தொழில் நகரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

கோவை பகுதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகத்தின் மிகச்சிறந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் பகுதியாக மாற்ற வேண்டும் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசை வேண்டிக் கொள்வதுடன் அதற்கான முழு ஒத்துழைப்பும் தருவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீராமுலு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.