கோவை கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா

“கம்பனை உலகிற்கே உணர்த்த வேண்டும்”!

கோவை கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

கோவை கம்பன் கழகத்தின் தலைவர் பதி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். கம்பன் கழகத்தின் பொருளாளர் பாலசுந்தரம் வரவேற்புரை வழங்கி கம்பன் கழகத்தின் இலக்கிய செயல்பாடுகளை விளக்கி பேசினார்.

நிகழ்வில் கம்பன் கழகத்தின் ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.

மேலும், பொன்விழா சிறப்பு நூலை கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, இதனை நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா பெற்றுக்கொண்டார்.

இலக்கிய சிந்தனை வளரவேண்டும்!

கிருஷ்ணராஜ் வாணவராயர் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது: கம்பன் கழகத்தின் நிறுவனர் மறைந்த ஜி.கே.சுந்தரம் தான் செய்யும் தர்ம காரியங்கள் வெளியில் தெரிய கூடாது என நினைப்பவர். எதை செய்தாலும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர். கம்பனை பற்றி இளைஞர்கள் மத்தியில் சென்று சேர்க்கும் பணியை கம்பன் கழகம் செய்து வருவதாக குறிப்பிட்டு பேசினார்.

தொலைக்கட்சிகளில் முன்பு ராமாயணத்தை ஒளி பரப்பும் போது இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் ஜாதி, மதம் கடந்து அதனை நேசித்தனர். இன்றைய இளைஞர்கள் இலக்கியத்தில் இருந்து விலகி நிற்கின்றனர். சமூகத்தின் போக்கும் வேறு மாதிரி உள்ளது. இந்த நிலைமை மாறவேண்டும். பொருளாதாரம் மற்றும் தொழிலை நோக்கி மட்டுமே ஓடிக் கொண்டிருக்காமல் இலக்கியம் குறித்த சிந்தனையையும் வளர்த்துக் கொள்ளுங்கள் எனப் பேசினார்.

நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா, பொன் விழா ஆண்டில் வெளியிடப்பட்ட பரதன் குறித்த நூல் பற்றி விளக்கி வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ் வாழும்போதே அறம் வாழும்!

நிகழ்வில் தினமணி நாளிதழின் ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து கூறுகையில், கம்பன் கழகம் எனக்கு புதிதல்ல. அதனோடு நான் மாணவனாக இருக்கும் பொழுதில் இருந்து பயணித்து வருகிறேன். கம்பன் விழாவிற்கு மாணவர்கள் ஆரவாரத்துடன் சென்ற காலங்கள் எல்லாம் உள்ளது. ஆனால் இன்று இதுபோன்ற விழாக்களுக்கு இளைஞர்களின் கூட்டம் குறைந்து வருகிறது.

ஆனால் காட்சி ஊடகம், சமூக வலைதளங்களில் கம்பன் குறித்தும், கம்பராமாயணம் குறித்த உரைகளும் வெளிவருகின்றன. அதனை லட்ச கணக்கான மக்கள் பார்வையிடுகிறார்கள். கம்பனுக்கும், கம்பராமாயணத்துக்கும் அப்படி ஒரு ஈர்ப்பு உள்ளது.

கம்பன் விழா கோவையில் நடைபெறும் வரை தமிழுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தமிழுக்கு கதி கம்பனும், திருவள்ளுவருமே. ஊர்தோறும், வீதிதோறும் திருக்குறள் மன்றம் இருக்க வேண்டும். அதுபோல மகாகவி பாரதியார் பற்றியும் அனைத்து இடங்களிலும் பேசப்பட வேண்டும். இப்படி நிகழ்ந்தாலே போதும் தமிழும், தமிழ் இனமும் தலை சிறந்து வாழ்ந்திடும். ஏன் என்றால் தமிழ் வாழும் போதுதான் அறம் வாழும் என குறிப்பிட்டு கூறினார்.

உலகின் ஒப்பற்ற படைப்பு கம்பராமாயணம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தனது இலக்கிய பேரூரையில் கூறியதாவது: வால்மீகி எழுதிய ராமாயணம் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பல்வேறு வடிவங்களில் உள்ளது. அதில் கம்பர் எழுதிய கம்பராமாயணம் ஈடு இணையற்றது.

தமிழ் என்று சொன்னாலே அது அறம் தான். காலங்களை கடந்து நிற்கும் படைப்புகள் தான் திருக்குறளும், கம்ப ராமாயணமும். கம்பனின் படைப்பு காலம் காலமாக பொக்கிஷமாக அறியப்படுகிறது.

ஒரு நாட்டின் மேன்மை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மொழி சார்ந்த படைப்புகள் மூலம் தான் அறிந்து கொள்ளமுடியும் என அறிஞர்கள் கூறுகின்றனர். உலகிற்கு மிக சிறந்த அற சிந்தனைகளை நம் இலக்கியங்கள் கூறியுள்ளன.

அறம் என்றும் நிலைத்து நிற்கும் வகையிலேயே கம்பராமாயணம் அமைந்துள்ளது. இந்த மண் அறத்தால் எழுந்து நிற்க்க கூடியது. மக்களை காக்க கூடிய ஒரு மன்னன், தாய் என்ற நிலையில் இருந்து அவர்களை காக்க வேண்டும் என கம்பன் தனது பாடல் மூலம் பதிவு செய்கிறார்.

கம்பன் தன் படைப்பில் இயற்கை, அன்பு, பாசம், வீரம், பகை, கருணை, ஊர், மக்கள் என பல்வேறு பாத்திரப் படைப்புகளை ஒரே நூலில் கூறியுள்ளார். கம்பராமாயணம் மட்டும் தான் அன்பையும், அறத்தையும் பிண்ணி பிணைத்துள்ளது. அறசிந்தனை மிக்க வாழ்வை வாழ வேண்டும்.

தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்து சொல்லி இருக்கிறார் கம்பன். உலகின் ஒப்பற்ற படைப்பு கம்பராமாயணம். இப்படிப்பட்ட படைப்பு பிற நாடுகளுக்கும் சென்று சேர வேண்டும் என்ற பணியை கம்பன் கழகம் செய்து வருகிறது.

தன் பாடல் வாயிலாக மானுடத்தின் மேன்மையையும், உன்னதத்தையும் எடுத்துரைக்கிறார் கம்பர். கம்பனை அனைவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த படைப்பின் உன்னதம் எங்கும் செல்ல வேண்டும். குறுகிய வட்டத்திற்குள் கம்பனை அடைத்து விடாமல் உலகிற்கே அவரை உணர்த்த வேண்டும்.