ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், கோவை ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா 2.0 முகாம் நடைபெற்றது.

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், தூய்மை இந்தியா 2.0 முகாம், கோவை ரெயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். சென்னை நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநரகத்தின் மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, சென்னை தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்ட மாநில அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இம்முகாமில் பங்கேற்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று தெருக்கூத்து, நாடகம், நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தி தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ரெயில் நிலையத்திற்குள் பேரணியாக சென்று பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து ரெயில் நிலைய வளாகம், தண்டவாளம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இருந்து காகிதம், பிளாஸ்டிக், களைச் செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

இந்நிகழ்வில் ரெயில்வே தலைமை சுகாதார ஆய்வாளர் நந்தலால் மீனா, சுகாதார ஆய்வாளர் பிரீத்தி அருணா, ரெயில் நிலைய அலுவலர் லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன், நாகராஜன், சுபாஷினி, தீபக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.