கோவை அருகே ரயில் மோதி 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழப்பு

தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை 12 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக ரயில் பாதை செல்வதால் அவ்வப்போது தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான வாளையாறு அருகே ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்தது, இதனை அடுத்து யானைகளின் நடமாடத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் வாளையார் கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு 17 யானைகள் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3:40 மணியளவில் இந்த யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில், தண்டவாளத்தை கடக்க  முயன்ற சுமார் 20  வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ரயில் மோதியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரயில் அதிவேகமாக இயக்கப்பட்டதா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழந்து வருவது ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.