பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை – ஈரோடு தினசரி மெமு ரயில் நேரம் மாற்றம்

கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை – ஈரோடு மெமு ரயிலை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், கோவையில் இருந்து தினமும் மாலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது இரவு 9.15 மணிக்கு ஈரோட்டைச் சென்றடையும். இந்நிலையில், கோவையில் இருந்து மாலை 6.35 மணிக்கு இயக்கப்படும் ரயிலை, மாலை 6 மணிக்கு மாற்றுமாறு பயணிகள் தரப்பில் சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதைத் தொடா்ந்து, இந்த ரயிலானது கோவையில் இருந்து ஈரோட்டுக்கு மாலை 6.10 மணிக்குப் புறப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வியாழக்கிழமை முதல் கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 6.10 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் இரவு 8.35 மணிக்கு ஈரோடு நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், வஞ்சிபாளையம், திருப்பூா், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூா், பெருந்துறை, தொட்டிபாளையம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கோவை – திருப்பூா் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை – சேலம் மெமு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவையில் இருந்து சேலத்துக்கு தினமும் காலை 9.05 மணிக்கு மெமு ரயில் (எண்: 06802) இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், சேலத்தில் இருந்து கோவைக்கு தினமும் பிற்பகல் 1.40 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (எண்: 06803) இயக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை – திருப்பூா் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக அக்டோபர் 13-ந் தேதி முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை மெமு ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.