தீபாவளி திருடர்களை பிடிக்க கோவை போலீசார் சாதாரன உடையில் கண்காணிப்பு

கோவை நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய கடை வீதி, ராஜ வீதி, ஒப்பணகார வீதி, கிராஸ்கட் ரோடு, டி.பி ரோடு உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய வணிக, வர்த்தக பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்ட நெரிசலை கண்காணிக்க நகரில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பைனாகுலர் மூலமாகவும், கண்காணிப்பு காமிரா மூலமாகவும் கூட்ட நெரிசலையும், திருடர்களையும் கண்காணித்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முக்கிய ரோடுகளில் போலீசார் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்தும் இடங்கள் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. நெரிசல் மிகுந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி திருடர்களை பிடிக்க நகரில் முக்கிய இடங்களில் போலீசார் சாதாரகண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காந்திபுரம், உக்கடம் ஆகிய பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசல் மிக்க வீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

வெளியூர் திருடர்கள் மற்றும் உள்ளூர் திருடர்கள் 150 பேரின் போட்டோ வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் லாட்ஜ், ஓட்டல்களில் தங்கி கைவரிசை காட்ட முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. வழக்கமான நாட்களைகாட்டிலும் 2 மடங்கு வாகன போக்குவரத்து அதிகமாகி விட்டது.

இதனை சரி செய்வது கடிணமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. கடை வீதிகளில் நிறுவனத்தினர் வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும். நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடாது. தீபாவளி முடியும் வரை மாலை நேரங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என்றார்.