உணவு பொருட்களில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்கக் கூடாது

கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த வேண்டும்.

உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிப்பின்போது சமையல் எண்ணெய் அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும். சூடேற்றப்பட்ட எண்ணையில் மேலும் புதிய எண்ணை சேர்த்து மீண்டும் மீண்டும் சூடேற்றி சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.

இனிப்பு கார வகைகள் தயாரிப்பில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்கக் கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் குறிப்பிட்ட அளவை மீறக்கூடாது.

உணவுப் பொருள் தயாரிப்பு, விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு கலன்களை தூய்மையாக கழுவி நன்றாக உலர்த்த வேண்டும். உணவு சமைக்கும், கையாளும் பணியாளர்கள் தன்சுத்தம் பராமரிக்க வேண்டும்.

பேக்கிங் செய்யப்படும் உணவுப் பொட்டலங்கள் மீது உணவுப் பொருளின் விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். விவரச்சீட்டு எளிதில் அழிய கூடிய வகையிலோ, கிழியக் கூடிய வகையிலோ, ஸ்டிக்கர் வடிவிலோ இருக்கக்கூடாது. உணவுப் பொருட்கள், எண்ணை பலகாரங்கள் பரிமாறும்போது இலை அல்லது தட்டுகள் பயன்படுத்த வேண்டும்.

உணவுப் பொருட்களை அச்சிடப்பட்ட தாள்கள், செய்தித் தாள்களில் வைத்து பரிமாறவோ, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யவோ கூடாது. தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், பொது மக்கள் 94440-42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் நபரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.