டெக்ஸ்வேலியில் தீபாவளி விற்பனை கண்காட்சி துவக்கம்

ஈரோடு சித்தோடு அருகே, பெங்களூரு – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் 20 லட்சம் சதுர அடியில் அமைந்திருக்கும் டெக்ஸ்வேலியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி நிகழ்வின் துவக்க விழாவை புதன்கிழமையன்று ஈரோடு மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. அதில் டெக்ஸ்வேலி துணைத்தலைவர் தேவராஜன், செயல் இயக்குனர் குமார் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிலாஸ் பால் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில்: இந்த தீபாவளி விற்பனை கண்காட்சி அக்டோபர் 12 முதல் 24 வரை நடைபெறும். 140-க்கும் மேற்பட்ட அரங்குகள் நிறைந்த இந்த கண்காட்சியில் வீட்டு உபயோகப்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்களின் அணிவகுப்பு, பர்னிச்சர்கள், அழகுசாதன பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், ஆயுர்வேத மருந்தகம், கணினிப் பொருட்கள், டாட்டூஸ், அழகுநிலையங்கள் இடம்பெறுகிறது.

அதுமட்டுமின்றி 50,000 சதுர அடி பரப்பளவில் பிரத்யேக வேடிக்கை விளையாட்டு மையம் மற்றும் 25 க்கும் மேற்பட்ட சுவையான உணவகங்களுடன் கூடிய உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த கண்காட்சி விழாவில் அக்டோபர் 14,15,16 ஆகிய நாட்களில் பிரபல சின்னத்திரை கலைஞர்கள் பங்குபெறும் ஸ்டார் ஷோ நிகழ்வுகளும், 20ம் தேதி ‘சங்கமம்’ என்ற தமிழ் கலாசார திருவிழாவும் நடைபெற உள்ளன.

இந்த டெக்ஸ்வேலி விழாவில் ஸ்லோகன் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெரும் வாடிக்கையாளர்களுக்கு பல பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக ஒரு நபருக்கு ஒரு கார். இரண்டாவது பரிசாக 3 நபர்களுக்கு இருசக்கர வாகனமும், மூன்றாம் பரிசாக 50 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.