ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஐ.சி.டி அகாடமி எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையம் நடத்தும் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு, இளைஞர்களின் தொடர் சொற்பொழிவு போட்டிகளின் இறுதி சுற்று, புதன்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் ஜேனட் வரவேற்புரை வழங்கினார். ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ஆதித்யா சிறப்புரை வழங்கினார்.

ஐசிடி அகாடமியின் தலைமை செயல் அலுவலர் பாலசந்தர் மாநாட்டின் முதன்மை உரையாற்றினார். காக்னிசன்ட் நிறுவனத்தின் அரசு தொடர்பான மாநில மென்பொருள் சேவை துறையின் தலைவர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார்.

இந்த இளைஞர் தலைமை பண்பு மாநாட்டின் தலைமை விருந்தினராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார்.

சிறந்த உலகை உருவாக்குங்கள்!

மாணவர்கள் மத்தியில் கனிமொழி எம்.பி பேசியதாவது: மாணவர்களை தகவல் தொழில்நுட்பத்தில் ஊக்குவித்து வரும் ஐ.சி.டி அகாடமி ஆப் தமிழ்நாடு திட்டத்தை உருவாக்கியவர் கலைஞர் என்பதை பெருமிதம்பட தெரிவித்தார். தனது கொள்கைகள் மூலம் முழு தேசத்திற்கும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. மதிய சத்துணவு திட்டத்தை துவங்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இன்று நாடு முழுவதும் சென்று அடைந்துள்ள மிகப்பெரிய திட்டமாக மாறி இருக்கிறது.

அதேபோல தமிழக முதல்வர் ஸ்டாலினால் துவங்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை தங்களது மாநிலங்களில் செயல்படுத்துவது குறித்து நம்மிடம் ஆலோசித்து வருகின்றனர். இதுபோல தமிழ்நாடு பல்வேறு திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக தகவல் தொழில்நுட்பத்திற்க்கான பாலிசியை தமிழகம் தான் வெளியிட்டது.

மாணவர்களுக்கான தலைமை பண்புகளில் மிக முக்கியமானது உங்களை நீங்கள் புதிதாக தகவமைத்துக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும். தொழில்துறை உங்களிடம் எதை எதிர்பார்க்கிறது என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

“மிகசிறந்த தலைவர் என்பவர் மக்களை படிக்கக்கூடியவர்கள்” என ஜான் மேக்ஸ் கூறுகிறார். தலைமை பண்பிற்கு மிக முக்கியம் மக்கள் கூறவருவதை கேட்க வேண்டும். பிறர் சொல்ல வரும் கருத்தைக் கேட்டு, அதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது கம்யூனிகேஷனில் மிக முக்கியமானது. ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்த வார்த்தைகளை கோர்வையுடன் பயன்படுத்துவதுடன், அவை மற்றவர்களுக்கு புரியவும் வேண்டும்.

பிறரிடம் உரையாடும் முறை (கம்யூனிகேஷன்) காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. ஒருகாலத்தில் மேடைபேச்சு மூலமாக மக்களிடம் பேசுவது தான் ஒரே வழி. அதற்கு பின்பு கடிதங்கள் இருந்தது. இன்று அந்தநிலைமை மாறி விட்டது. இன்றுயாரையும் நேரில் சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் வழியாக பிறரிடம் உரையாடும் முறை வந்துவிட்டது.

ஒரு பொருளின் தயாரிப்பு குறித்து மக்களிடம் கருத்து பெற பல மாதங்கள் ஆகும். இதனை அறிய ஒரு ஆய்வு தேவைப்படும். ஆனால் இன்று உடனடியாக மக்களிடம் இருந்து கருத்து சமூக வலைத்தளம் மூலம் அறியப்படுகிறது.

ஒருகாலத்தில் பருவநிலை மாற்றம் குறித்து பேசும்போது, யாரும் அதை கேட்க தயாராக இல்லை. மிகப்பெரிய நாடுகள் கூட அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் கிரேட்டா துன்பெர்க் என்ற சிறுமி ஸ்வீடிஷ் பாராளுமன்றம் முன்பு பருவநிலை மாற்றம் குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பதாகையை ஏந்தி அமர்ந்தது உலகம் முழுவதும் வைரலானது. இன்று அவரது பேச்சை அனைவரும் கவனிக்கிறார்கள். அப்படிப்பட்ட மாறுதலை தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் 65% மக்கள்தொகையினர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்கின்றனர். இது இளைஞர்களின் உலகமாக இருந்து வருகிறது. இளைஞர்கள் தலைமை பண்பை எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு நிலைமை இன்று இருக்கிறது.

தமிழ் நமது அடையாளம், அது நாம் யார் என்பதை உணர்த்தும். வளர்ச்சி, தமிழ் அடையாளங்கள், சுயமரியாதை, வரும் தலைமுறையின் எதிர்காலம் ஆகியவற்றை சிந்திக்க கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதற்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரும் தான் காரணம்.

தகவல்தொடர்பு திறனை எப்படிப்பட்ட தலைமைப் பண்புக்கு பயன்படுத்தப் போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தை விடவேண்டும். உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துக்கொள்ள முற்பட்டு, உலகை சிறந்த இடமாக மாற்றுங்கள் எனப் பேசினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் டீன்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி பேசியதாவது: பிற மொழியை கற்க வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. மொழி என்பது என்னுடைய அடையாளம் என்னை பற்றியும், என் வரலாற்றை தெரிந்துக்கொள்ள உதவுகிறது. நம்முடைய மொழி அடையாளம், சுயமரியாதை ஆகும்.

மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார். தமிழ்,ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. உலகத்தின் தொடர்பு கொள்ள ஆங்கிலம், நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. மொழிப் போர் குறித்து ஒரு கதவு போதுமானது என அண்ணா அன்றே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைபாடு.

இந்தியாவை பொறுத்தவரை schedule 8″ல் மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் பார்க்க வேண்டும். சில மொழிகள், அலுவல் மொழிகளை கொண்டு வர நினைக்கிறார்கள். ஆனால் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தமிழிசை செளந்தரராஜன் பெண்கள் ஆடை அணிவது குறித்த கருத்திற்கு பதிலளித்த கனிமொழி, தந்தை பெரியார் குறிப்பிட்ட மாதிரி பெண் தனக்கு எது வசதியான உடையோ அலங்காரமோ அவர் தான் முடிவு செய்ய வேண்டும் அதை பெரியார் வலியுறுத்தியுள்ளார். கட்டுபாடு என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.