தி ஐ ஃபவுண்டேஷன் சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம்

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.27 லட்சம் செலவில் 64 நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷ்ரேயாஸ் ராமமூர்த்தி ஆகியோர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினர்.

மாணவியருக்கு குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாத வகையில், குடிநீர் மூலம் பரவும் பெரும் தொற்று நோய்களைக் கருத்தில் கொண்டு, குளிர்ந்த மற்றும் சாதாரண நீர் வசதிகொண்ட 64 நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்களை, கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தி ஐ ஃபவுண்டேஷன் வழங்கியது.

மேலும், கூடுதலாக, தனது சொந்த செலவில் அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

டாக்டர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்கும் நோக்கத்தில், விரைவில் மேலும் பல நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்களை படிப்படியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.