ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றார்.

புதுடெல்லி பல்கலைக்கழக மானியக்குழு இணைச்செயலர் சக்கீல் அஹமது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,பேசியதாவது: இந்தக் கல்லூரி 35 ஆண்டு கால பாரம்பரியத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் கொள்கைகளை பறைசாற்றும் நிறுவனமாக திகழ்ந்து வருவது பாராட்டுக்குரியது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநலன் என பல்வேறு பரிணாமங்களில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி, சமூகத்திற்கு சேவையாற்றி வருவது சிறப்பிற்குரிய அம்சமாகும்.

கொங்குமண்டலத்தில் சிறந்த கலை அறிவியல் கல்லூரிக்கான கற்றல் விருது, கற்றல் கற்பித்தலில் புதுமையான அணுகுமுறைகள், தற்போதைய சூழலுக்கான தொழில்சார் கல்வி, பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் உலக அளவிலான போட்டியாளர்களை எளிதாக எதிர்கொள்ளும் அளவில் கல்வி முறை மேம்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பல்கலைக்கழக மானியக்குழு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு நிதியுதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது மாணவர்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கும், ஆசிரியர்களின் ஆராய்ச்சி மேம்பாடுகளுக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில், மத்திய உயர்கல்வித் துறை இணையதளங்களை தொடர்ந்து பார்வையிடுங்கள். இவற்றில் ஏராளமான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இதில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் நிதியுதவி திட்டங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் விஜயகுமார், டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.