கே.பி.ஆர் கல்லூரியில் தேசிய விமானப்படை தின கொண்டாட்டம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு கல்லூரியின் தேசிய மாணவர் படை, விமானப்படையின் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் காமெண்டர் விமல்ராஜ் கலந்துகொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று, பின்னர் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது அவர் நமது ராணுவத்தின் பெருமைகள் பற்றியும், தேசிய மாணவர் படை பிரிவுகளின் சிறப்புகள் பற்றியும், இந்திய ராணுவத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் அகிலா, இக்கல்லூரியில் ஏற்கனவே தேசிய மாணவர் படையில் விமான படை பிரிவு , மருத்துவ படை பிரிவு மற்றும் பெண்கள் படை பிரிவுகளை கொண்டுள்ளது என்றும், வரும் ஆண்டில் கப்பற்படை பிரிவையும் கல்லூரியில் கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

கல்லூரியில் தேசிய மாணவர் படை பிரிவு சிறப்பாக செயல்படுவதாகவும் மாணவர் படைப்பிரிவு இருப்பது கல்லூரிக்கு பெருமை சேர்ப்பதாகவும், இந்த மாணவர்கள் எப்போதும் சிறந்த ஒழுக்கத்திற்கு முன் உதாரணமாக திகழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து தேசிய படை பிரிவு மாணவர்களும் இந்திய ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் அந்தஸ்தில் பணியில் சேர வேண்டும் என்றும், இக்கல்லூரியில் அதற்கான பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படையின் மற்ற படை பிரிவு மாணவர்கள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.