மங்கள்யான் செயற்கைக்கோளுடன் 8 ஆண்டுகளுக்கு பின் தொடர்பு துண்டிப்பு

இந்தியா அனுப்பிய செவ்வாய் சுற்றுவட்ட கலனின் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்து விட்டிருப்பதால் அதன் பணிகளை மேலதிகமாகத் தொடர முடியாத நிலை உண்டாகி இருக்கும் என்று கணிக்கப்படுவதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், சுமார் எட்டு ஆண்டு காலம் பூமிக்குத் தரவுகளை அனுப்பியுள்ளது.

‘மங்கள்யான்’ என்று பரவலாக அறியப்படும் இந்தியாவின் செவ்வாய் சுற்று வட்டக் கலன் 450 கோடி ரூபாய் செலவில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிஎஸ்எல்வி – சி 25 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கு மேலே இருக்கும் அதன் சுற்றுவட்டப் பாதையில் முதல் முயற்சியிலேயே நிலை நிறுத்தப்பட்டது.

தற்போதைக்கு செவ்வாய் சுற்றுவட்டக் கலனில் எரிபொருள் இல்லை; அதன் பேட்டரியும் தீர்ந்துவிட்டது; செவ்வாய் சுற்றுவட்ட கலனுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது, என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி முகமையான இஸ்ரோவின் வட்டாரங்கள் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளன.

செவ்வாய் சுற்றுவட்டக் கலனின் பேட்டரி தீர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த காலங்களில் சூரிய கிரகணம் உண்டான நேரங்களில், அதன் சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டது.

கடைசியாக செவ்வாயில் உண்டான சூரிய கிரகணம் ஏழரை மணி நேரம் நீடித்தது. அதில் இருந்த எரிபொருள் அனைத்தும் அந்த செயற்கைக்கோளால் (மங்கள்யான்) பயன்படுத்தப்பட்டுவிட்டது,” என்று ஓர் இஸ்ரோ அதிகாரி பிடிஐ முகமையிடம் கூறியுள்ளார்.