வேளாண் பல்கலையில் தொழில் முனைவோர் மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து “வேளாண் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மையம் மற்றும் புதுமை ஊக்குவிப்பு திட்டம்” பற்றிய விழிப்புணர்வு என்ற ஒரு நாள் நிகழ்ச்சி வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம், இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்புரையில், வேளாண் மையம் மற்றும் அதன் அவசியம் குறித்து விளக்கினார்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கூடுதல் இயக்குநர் (சென்னை) முத்துராமன் தனது பாராட்டு உரையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், புதுமை வவுச்சர் திட்டம் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்ககைலக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, புதுமை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம், வேளாண் மையம் மற்றும் அக்ரி ஸ்டார்ட்அப் பொருட்கள் கண்காட்சி அரங்குகளை மாணவர்களின் நலனுக்காக டெமோ தினம் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.

அவர் தனது துவக்க உரையில், மாணவர்கள் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடுவதை விட தங்கள் சொந்த விவசாய வணிக முயற்சிகளையும், நிறுவனங்களையும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்காக வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்றும் மாணவர்கள் சிந்தனையைத் தூண்டும் ஆக்கப்பூர்வமான யோசனைகளில் கவனம் செலுத்தி ஈடுபடவேண்டும் எனவும் கூறினார்.

தொழில்நுட்ப வணிக இன்குபேட்டரின், ஐவிபி மானியம் மூலம் ஆறு பயனாளிகளுக்கு ரூ. 6.30 லட்சம் புதுமை மானியத்தை வழங்கினார்.

மேலும் ஈடிஐஐ. கிள்ளிகுளம், வேளாண் வணிக இன்குபேஷன் மன்றம் மற்றும் ஈடிஐஐ, பெரியகுளம், தோட்டக்கலை வணிக இன்குபேஷன் மன்றம்ஆகியவற்றுக்கு ரூ. 48 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதிலுமிருந்து தொடக்க நிறுவனங்கள் கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 500 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.