உடல் கடந்து வாழ்பவர்க்கும், மன நோயாளிக்கும் என்ன வேறுபாடு?

சத்குரு, நாம் நம் உடல் கடந்து வாழ வேண்டும் என்று கூறுகிறீர்கள். அவ்விதம் உடல் கடந்து வாழ்பவர்க்கும், ஒரு மன நோயாளிக்கும் என்ன வேறுபாடு?

சத்குரு:

உடல் கடந்து இருக்கும் நிலையை நீங்கள் மனம் பாதிக்கப்பட்ட நிலை என்று நினைத்தால், நீங்கள் ஏற்கனவே அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். கடந்த நிலை என்பது மன நோயையும் கடந்த நிலை என்று பொருள். உடல், மனம் இவற்றின் எல்லைகளைக் கடந்து விடுதல் என்பது உடல் மற்றும் மனத்தின் பாதிப்பிலிருந்து நிச்சயமாக விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பு.
ஒருமுறை சங்கரன்பிள்ளை கல்லூரியில் சேர விரும்பினார். ஒருநாள் ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்த்தார். அது அனேகமாக கல்லூரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து உள்ளே சென்றார். அங்கே அலுவலகத்தில் இருந்த அலுவலரிடம் விண்ணப்பப் படிவம் வாங்கி பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடுத்தார். இதைப் பார்த்த அந்த அலுவலர், “இது கல்லூரி அல்ல. இது ஒரு மனநோய் மருத்துவமனை” என்று கூறினார். அதற்கு சங்கரன்பிள்ளை, “நான் கல்லூரி என்று நினைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டேன். பூர்த்தி செய்துவிட்டதால் இங்கேயே சேர்ந்து கொள்கிறேன். என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?” என்று கூறினார். அதற்கு அந்த அலுவலர், “ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. இங்கே சிறிதாவது முன்னேற்றம் காட்டவில்லை என்றால், வெளியே விடமாட்டோம். கல்லூரியில் அப்படி இல்லை. இங்கு நீங்கள் நிச்சயமாக முன்னேற்றம் காட்ட வேண்டும்!” என்று கூறினார்.

எனவே மனநோய் என்பது முற்றிலும் உங்கள் மனம் சம்பந்தப்பட்டது. உங்கள் உடல், மனம் போன்றவற்றை கடந்து இருக்கும் நிலை வரும்வரை நீங்கள் தெளிவில், சமநிலையில் இருக்க வாய்ப்பே இல்லை. யோகாவின் முழு பயனுமே உடல், மனம் போன்ற எல்லைகளை கடப்பதற்குத்தான். என் செயல்பாடுகள் அனைத்துமே உடல், மனம் போன்ற எல்லைகளைக் கடப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்குவதுதான். உடலையும், மனதையும் கடப்பது என்றால், அவற்றைப் புறக்கணிப்பது என்று பொருள் கொள்ளக்கூடாது. ‘புத்தா’ என்ற சொல்லை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ‘பு’ என்றால் புத்தி, ‘தா’ என்றால் கடந்து இருப்பவர் என்று பொருள். எனவே புத்தா என்றால் தன் மனதை யார் கடந்து இருக்கிறாரோ அவர்தான் புத்தா. உங்கள் மனதில் நீங்கள் எப்போதும் துன்பத்துடனேயே இருக்கிறீர்கள். அப்போது மனநலம் இல்லாமல் போவதற்கான வாய்ப்பிலேயே இருக்கிறீர்கள். எனவே மனநலத்துடன் இருப்பதற்கான ஒரே வாய்ப்பு மனதைக் கடந்து போவதுதான்.

இப்போது நிகழ்காலத்தில் இல்லாத ஒன்றை கற்பனை செய்து கொண்டு அதன் பாதிப்பினால் துன்பப்படுவது மனநோய்க்கான மிகப் பெரிய வாய்ப்பு. இப்போது பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறீர்கள்? பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த ஏதோ ஒன்றிற்காக இப்போதும் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள். இப்போது அது முடிந்துபோன விஷயம். இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உங்களிடம் இருக்கிறது. அல்லது நாளை மறுநாள் ஏதோ நடக்கப்போவதை கற்பனை செய்து, அதற்கும் இப்போதே துன்பம் அனுபவிக்கிறீர்கள். இது நிச்சயமாக மனநோய்தான். மனதைக் கடந்து போக வேண்டும் என்று நான் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் மனதைக் கடந்து போனால் மனநோய் உங்களைத் தொடக்கூட முடியாது.

மனம் என்பதும் உடல்தான். இரண்டும் ஒரே விஷயம்தான். உடலில் எது நிகழ்ந்தாலும் அது மனதிலும் பிரதிபலிக்கும். மனதில் எது நிகழ்ந்தாலும் அது உடலில் பிரதிபலிக்கும். மருத்துவரைக் கேட்டால் விளங்கும். மனதில் பயம், கலக்கம் என்றால் உடலில் உள்ள குடலில் புண் (அல்சர்) ஏற்படுகிறது. மனதில் அழுத்தம் என்றால் இதயக் கோளாறு ஏற்படுகிறது. எதற்கு என்றால் உடலும், மனமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையன. இரண்டையும் பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்றுதான்.
நம் கையில் உள்ள ஒரு விரலுக்குச் சுண்டு விரல் என்றும் மற்றதற்கு ஆள்காட்டி விரல் என்றும் கூறுகிறோம். இரண்டும், இரண்டு விதமான செயல் செய்வதால் வித்தியாசமாகத் தெரிகிறது. ஆனால் இரண்டும் ஒரே கைதான். நீங்கள் உடல்தாண்டி இருக்க வேண்டுமென்றால், உடலை உதறிவிட்டுப் போக வேண்டும் என்பதல்ல அதன் பொருள். உடல் தாண்டி இருந்தால் நாம் விரும்பியவாறு அதை உபயோகிக்க முடியும். இந்த உடல், மனம் இரண்டையும் கடந்து இருந்தால், நம் விருப்பத்திற்கு இவற்றை உபயோகப்படுத்த முடியும். உங்களின் இப்போதைய நிலையில் உடல், மனம் இவற்றை நீங்கள் உங்கள் விருப்பப்படி உபயோகப்படுத்தவில்லை. மாறாக உடலும், மனமும் இப்போது உங்களை உபயோகப்படுத்தும் நிலை உள்ளது.

உடல் சொன்னபடி, மனம் சொன்னபடி தானே நீங்கள் வாழ்கிறீர்கள்? அப்படித்தானே? தற்போது யோகா சிறிது செய்வதால், உடல் என்ன கூறினாலும், கால் வலிக்கிறது, மரத்துப்போகிறது என்றாலும், தண்ணீர் குடிக்க வேண்டும், சாப்பிட வேண்டும், என்று என்ன கூறினாலும், அதற்குச் செவி சாய்க்காமல் சத்சங்கத்தில் இப்போது உட்கார்ந்திருக்கிறீர்கள். இப்போது சிறிதளவு உடல் கடந்து இருப்பது போன்ற தன்மையை உருவாக்கியுள்ளீர்கள். இதேபோல மனம் என்ன சொன்னாலும் அதைத்தாண்டி நாம் இருந்துவிட்டால் பிறகு உடல் மனம் இரண்டும் நாம் சொல்வது போல கேட்கும். அதை விடுத்து அவை சொல்வது போல நாம் கேட்க ஆரம்பித்தால் நிச்சயமாக நாம் பைத்தியம்தான் ஆவோம்.