ஸ்ரீ எஸ்.என்.எஸ் அறக்கட்டளையின் வெள்ளி விழா கொண்டாட்டம்

கோவையில் மிக சிறந்த பல கல்லூரிகளை (எஸ்.என்.எஸ் கல்வி குழுமம்) தனது அறக்கட்டளையின் கீழ் உருவாக்கி நிர்வகித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ எஸ்.என்.எஸ் சேரிடேபிள் டிரஸ்டின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் கோலகலமாக நடைபெற்றது.

மேலும், வெள்ளி விழா கொண்டாட்டம், நிறுவனர் நாள், கலர்ஸ் கொண்டாட்ட போட்டி நிகழ்வு என முப்பெரும் விழாவாக அரங்கேறியது. நிகழ்ச்சியை ஸ்ரீ எஸ்.என்.எஸ் சேரிடேபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தாளாளர் டாக்டர் ராஜலட்சுமி குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார்.

எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தூர்பாண்டியன் தனது வரவேற்புரையில், ஸ்ரீ எஸ்.என்.எஸ் சேரிடேபிள் டிரஸ்ட் தனது 25 வது ஆண்டை கடந்து வெள்ளி விழாவை கொண்டாடிவருகிறது. கோவையில் ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் இந்த அறக்கட்டளையின் கீழ் 10 கல்லூரிகள் இயங்கி வருகிறது. 1997 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளை மென்மேலும் வளர வேண்டும் என தனது வாழ்த்தை தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளையின் கீழ் 1999 ஆம் ஆண்டு டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதன்முதலாக துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, எஸ்.என்.எஸ் அகாடமி பள்ளி, ஹெல்த் சயின்ஸ் கல்லூரி உள்ளிட்ட 10 கல்லூரிகள் எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன என்பதை குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் வெள்ளி விழா மலர் நினைவுப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை எஸ்.என்.எஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து எஸ்.என்.எஸ் அறக்கட்டளை மற்றும் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியம் மற்றும் அறங்காவலரும், தொழில் நுட்ப இயக்குனருமான நளின் விமல்குமார் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் தொழில் நுட்ப இயக்குனர் நளின் விமல்குமாருக்கு, எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் செந்தூர்பாண்டியன், பொறியியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனிதா ஆகியோர் செங்கோல் வழங்கி கெளரவித்தனர்

நிகழ்ச்சியில் எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் இயக்குனர் அருணாச்சலம் பேசுகையில்: இக்கல்லூரியில் படித்தவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர். இந்த கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியம் சிறந்த பொறியியலாளர், ஆசிரியர், கல்வியியலாளர், ஆராய்ச்சியாளர், தொழிலதிபர் என பன்முகங்களை கொண்டுள்ளார்.

அவர் புரிந்துள்ள சாதனைக்கு அவரது நற்பண்புகளே காரணம். இலக்கை அடைய விடாமுயற்சியும், கடின உழைப்பையும் கொண்டிருக்கும் அவரிடம் இருந்து பல விசயங்களை நான் கற்றுள்ளேன். இந்த கல்லூரிகளின் வளர்ச்சிக்கு காரணமான அவர், பல விருதுகளை பெற்றுள்ளார் எனக் கூறினார்.

அவரது உரையில் தாளாளர் ராஜலட்சுமி பற்றி கூறுகையில், மருத்துவத்துறையில் சேவையாற்றிக் கொண்டிருந்த அவர் கல்வி துறையில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி தர வேண்டும் என்ற காரணத்தினால் தன்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டார். கல்விக்காக தனது நேரத்தை ஒதுக்கி கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார் என்பதை அடிக்கோடிட்டு பேசினார்.

தொழில் நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் குறித்து பேசுகையில், இந்த கல்வி குழுமத்தை வழிநடத்தி செல்லவேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார். இவர் வந்தபின்பு பல புதிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு செயல்முறைபடுத்தப்பட்டன. இந்தியாவிலேயே முதல் முறையாக டிசைன் திங்கிங் என்ற திட்டத்தை எஸ்.என்.எஸ் கல்லூரிகளில் அறிமுகம் செய்தார். மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அவரால் கொண்டு வரப்பட்டது எனப் பேசினார்.

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அனிதா எஸ்.என்.எஸ் கலர்ஸ் 2022 நிகழ்ச்சி குறித்த விரிவான விளக்கம் அளித்தார். பின்னர் எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் பீஷ்மர் என்று அழைக்கப்படும் வேலுசாமி நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார்.

எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் சுப்ரமணியம், தனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியினைக் கூறினார். மேலும் நளின் விமல்குமார் கல்லூரிகளை திறம்பட வழி  நடத்தி வருவதாக கூறி அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் பேசுகையில், வாழ்க்கையில் தோல்வி அனைவருக்கும் நிச்சயம் ஏற்படும். ஆனால் அதை வென்று காட்டி வளர்ச்சி அடைவது என்பது நம் கையிலே உள்ளது அதற்காக செயல்படுங்கள் என மாணவ, மாணவிகளுக்கு உத்வேகம் அளித்தார்.

நிகழ்வில் கலர்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், கே.ஜி.எப் திரைப்பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேலும், நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு செய்தியாக பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வரும் அக்டோபர் 8 ஆம் தேதி எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்திற்கு வருகை தர உள்ளார் என்ற அறிவிப்பை தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் மாணவர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

இந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வில் எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குனர்கள், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.