மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் டிஜிட்டல் புத்தகம் அறிமுகம்

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.ஆர்.ஐ.ஓ.ஆர்.) சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவிலேயே முதன்முறையாக வெளியிடப்படும் இந்த விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகத்தை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சுவாதி ரோகித் வெளியிட்டார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் குகன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகிகள், டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் புத்தக வெளியீட்டு குறித்து டாக்டர் குகன் கூறியதாவது: மார்பக புற்றுநோய்க்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் உலக மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த மாதம் இளஞ்சிவப்பு மாதம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் அது பற்றிய விழிப்புணர்வை அக்டோபர் மாதத்தில்  உடல் பரிசோதனையோடு சேர்த்து ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  எனவே 2020 ஆம் ஆண்டு தேசிய புற்றுநோய் பதிவு திட்டப்படி வருகிற 2025 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஆச்சரியமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதன்படி முன்கூட்டியே மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டால் அந்த பெண்கள் மார்பகங்களையும் இழக்க வேண்டியதில்லை. வாழ்க்கையையும் தொலைக்க வேண்டியதில்லை. ஆனால் தொடக்க நிலையில் அதை கண்டு பிடிக்கவில்லையென்றால் பெண்கள் மார்பகத்தையும், வாழ்க்கையையும் இழக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் தீபம் என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். இந்த இரண்டும் தான் இந்தியாவில் அதிக பெண்களை பாதிப்புக்குள்ளாகிறது.

இந்த ஆண்டு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மையம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த டிஜிட்டல் புத்தகம் உரையாடல் வடிவத்தில் உள்ளது. இதன் மூலம் மார்பக புற்றுநோய் பற்றிய அனைத்து விவரங்கள், சந்தேகங்கள், விளக்கங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். அதில் மார்பக புற்றுநோய் பற்றிய அறிமுகம், அதற்கான அறிகுறிகள், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள், ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது, நோய் கண்டறிவதற்கான பரிசோதனை,  சிகிச்சை முறைகள், மார்பக புற்று நோயை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்றவை ஒருவர் கேட்பது போலவும் அதற்கு  மற்றொருவர் பதில் அளிப்பது போலவும் இந்த விழிப்புணர்வு புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை ஒருவர் வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் புரட்டும் போது அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை ஒருவர் சொல்வது போலவும், அதற்கான  காட்சிகளை நாம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவது போல் இருக்கும். அந்த அளவிற்கு சுவாரஸ்யமான உணர்வை இந்த புத்தகம் ஏற்படுத்தும் என்பது உறுதி.

மூன்று வழிகளில் மார்பக புற்றுநோயை நாம் எளிதில் கண்டறியலாம். ஒன்று விழிப்புணர்வு தகவல்களை அறிந்து கொள்ளுதல், மற்றொன்று அது பற்றிய தகவல்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்தல், மூன்றாவது முன்கூட்டியே நோயை கண்டறியும் பரிசோதனையை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

மேலும், https://www.digione.in/srior/breastcancer/index.html இந்த லிங்க்கை ஸ்கேன் செய்து தவலை பெறலாம்.