கே.ஐ.டி கல்லூரியில் விருது வழங்கும் விழா

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் கே.ஐ.டி – என்சவ் கிளப் இணைந்து “IGEN SDG ஆக்க்ஷன் விருதுகள்” வழங்கும் விழாவை நடத்தியது.

ஐஜென் திட்டமானது உலகின் பல நாடுகளில் சேர்ந்து ஐ.நா.சபையின் அறிவுறுத்தல்படி உருவாக்கப்பட்ட அமைப்பு. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு இன்று பல கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விருது பெற்றனர். முன்னதாக கே.ஐ.டி கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் “நட்சத்திர விருதுகள்” பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஐஜென் தலைவர் ரமேஷ், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை, டீன் சரவணக்குமார், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் அசோக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐஜென் தலைவர் ரமேஷ் பேசுகையில், IGEN-GREEN 9 எரிசக்தி சேமிப்பு அவார்னஸ் கிளப் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் எரிசக்தி சேமிப்பு கிளப்பைத் தொடங்குவதும், எரிசக்தி சேமிப்பு அறிவுரையாளர்கள் உருவாக்குவதும் குறிக்கோளாக கொண்டுள்ளது. அவர்கள் கிராமம் மற்றும் பள்ளிகளில் ஆற்றல் பாதுகாப்பு திட்டங்கள், அதனைப் பற்றிய விழிப்புணர்வுகளை உருவாக்குவார்கள் என்று கூறினார். மேலும், “IGEN WALL of FAME” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை, டீன், சரவணக்குமார் பேசுகையில், எரிசக்தியை எந்தெந்த வகையில் சேமிக்கலாம் என்ற வழிமுறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிவரும் நம் நாட்டின் மின்சக்தி தேவையை கருத்தில் கொண்டு, கிடைக்கக் கூடிய மின்னாற்றலை சிக்கனமாக பயன்படுத்தவும், சேமிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் அசோக் குமார் பேசுகையில், சமுதாயத்திற்கு நாம் அனைவரும் எரிசக்தி சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புதுப்பிக்கத் தக்க எரிசக்திகளான சூரியசக்தி மற்றும் CFL, LED விளக்குகளை உபயோகிக்கவும், உயிரி எரிசக்திகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் கரியமிலவாயுவை கட்டுப்படுத்தி சுற்றுச் சூழல்களை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

IGEN SDG ஆக்க்ஷன் விருதுகள் G01- 245 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கே.ஐ.டி.கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், டீன்-மாணவர் அமைப்பு சுரேஷ், டீன்-கல்வி & ஆராய்ச்சி ராமசாமி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் மைதிலி, KIT – E99 challenge விழாவிற்றகான ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.