முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கூடவுள்ளது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறுது.

இந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள சட்ட மசோதாக்களுக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், சமீபத்தில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.