ஜாதிய முரண்பாடா?, மத முரண்பாடா?

தமிழக அரசியல் களத்தில் ஜாதிய முரண்பாடு அல்லது மத முரண்பாடு என எந்த ஆயுதத்தை திமுக எதிர்கொள்வது என்ற திரிசங்கு நிலையில் திமுக சிக்கித்தவிக்கிறது. திமுகவின் கொள்கைபரப்புச்செயலர் ஆ.ராசாவின் கருத்துதான் இந்த சிக்கலை உருவாக்கியுள்ளது.
தமிழக அரசியல் கருத்தியலை பொறுத்தவரை வடஇந்திய அரசியல் களம் போல இல்லாமல், பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற கருத்தியல் 1920 ஆம் ஆண்டு முதலே ஊடுருவியுள்ளது. நீதிகட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இதே மையப் புள்ளியாக இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பு வரை வரி கட்டுபவர்கள், பட்டதாரிகள், ஜமீன்தார்கள் ஆகியோர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும். வரி கட்டுபவர்கள், ஜமீன்தார்கள் என்ற அடிப்படையில் அனைத்து சமூகத்தில் இருந்த பணக்காரர்களும் அரசியலில் பங்கேற்றனர்.
இந்த அடிப்படையில் பிராமணர்கள், நகரத்தார்கள், செட்டியார்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள், நாயுடு, ரெட்டிகள் உள்ளிட்டோர் அரசியலில் அதிகம் பங்கேற்றனர். மேலும், அந்தந்த பகுதியில் இருந்த ஜமீன்தார்கள், பண்ணையார்கள் அரசியலில் ஈடுபட்டனர். காங்கிரஸில் பிராமணர்கள் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.
அந்த அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாத பெரியார், காங்கிரஸில் இருந்து விலகி நீதிக்கட்சிக்கு சென்றார். அப்போது முதலே நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிர் கருத்து உருவானது. ஆனால், 1939 இல் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வான பிறகு, தமிழக காங்கிரசை பொறுத்தவரை பிராமண நிர்வாகிகள் அதிகம் இருந்தாலும் தலைவராக வரும் வாய்ப்பு கிட்டவில்லை.
சுதந்திரத்துக்கு பிறகு, 1952 இல் முதல் பேரவைத் தேர்தல் நடந்தது. அதற்கு முன்பு மத்தியில் முதல் அரசியல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு இதர பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. இது காமராஜர், நேருவிடம் அழுத்தம் கொடுத்து கொண்டு வந்த சட்டத்திருத்தம் ஆகும். அதற்கு பெரியார் போராடினாரே தவிர, காமராஜரின் செல்வாக்கு தான் இச்சட்டத்தை கொண்டுவர உதவியது.
அதன்பிறகு, தேர்தல் அரசியலில் பிராமணர்களுக்கு எதிர்ப்பு இருந்ததாக எந்த ஆதாரமும் தேர்தல் களத்தில் இல்லை. காரணம், காமராஜர் அதிக பிராமணர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கினார். குறிப்பாக டி.டி. கிருஷ்ணமாச்சாரி (சென்னை), சி.ஆர்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), டி.எஸ்.சௌந்தரம் (திண்டுக்கல்), சி.ஆர்.பட்டாபிராமன் (கும்பக்கோணம்), ஆர்.டி.சாமிநாதன் (மதுரை) உள்ளிட்டோருக்கு எம்.பி. பதவி வழங்க காமராஜர் காரணமாக இருந்தார்.
1957 பேரவைத் தேர்தலில் பெரியார், காமராஜரை ஆதரித்தார். ஆனால், 4 பிராமணர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காமராஜர் வழங்கினார். அதிலும் குறிப்பாக தேர்தல் முடிந்த பின்னர் பிராமணர் இல்லாத அமைச்சரவை அமைக்கப்பட்டதை பெரியார் பாராட்டினார். அவ்வாறு அவர் பாராட்டிய ஒரு மாதத்திலேயே தஞ்சாவூர் எம்.பி.யாக இருந்த ஆர்.வெங்கட்ராமனை ராஜினாமா செய்யச் சொல்லி அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். இவ்வாறு செய்த காமராஜர், 1957 பேரவைத் தேர்தல் வெற்றியை விட 1962 இல் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியை அமைத்தார் என்பதே உண்மை.
அதேபோல, 1962 பேரவைத் தேர்தலில் ராஜாஜி சுதந்திர கட்சியை தொடங்கி 7.8 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். அவரது கூட்டணி கட்சியான முத்துராமலிங்க தேவரின் பார்வர்டு பிளாக் 1.3 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இந்த 9.1 சதவீத வாக்குகளுடன் காங்கிரசுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ராஜாஜி ஒன்று திரட்டினார். காமராஜருக்கு எதிராக திமுக கூட்டணியை கட்டமைத்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து அந்த கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது.
அதேபோல, 1971 பேரவைத் தேர்தலில் பிராமணரான இந்திரா காந்தியை முன்னிறுத்தி கருணாநிதி தேர்தலை சந்திக்கும்போது மக்களவை, பேரவைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல 1980, 2019 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் பிராமணர்களான இந்திரா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை முன்னிறுத்தி திமுக கூட்டணி 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
1984, 1989, 1991 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் பிராமணர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை பிரதமர் வேட்பாளர்களாக அறிவித்து அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1998, 1999 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் பாஜகவை சேர்ந்த பிராமணர் பிரதமர் வேட்பாளரான வாஜ்பாயை முன்னிறுத்தி அதிமுக, திமுக என இரு கட்சிகளுமே வெற்றியை பெற்றன.
1989 பேரவைத் தேர்தலில் அதிமுக பிளவானபோது ஜெ. அணி ஜெயலலிதாவாலும், ஜா. அணி வி.என்.ஜானகி என இரு பிராமணர்களாலும் தலைமை தாங்கப்பட்டு 22.3 சதவீதம், 9.1 சதவீதம் என மொத்தமாக 31.4 சதவீத வாக்குகளை பிராமண தலைமை திராவிட கட்சியில் பெற்றது.
அதேபோல, 1991, 2001, 2011, 2016 என 4 பேரவைத் தேர்தல்களில் திராவிட இயக்கமான அதிமுகவில் ஜெயலலிதா தன்னை மட்டுமே முன்னிறுத்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் பிராமணர் அல்லாத அரசியல் மேலோங்கி இருக்கிறதே தவிர, பிராமணர் எதிர்ப்பு அரசியல் என இல்லை. இத்தகைய நிலையில் திமுக துணைப் பொதுச்செயலர் ஆ.ராசா ஹிந்து மதத்தையும், பிராமணர்களையும் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே எங்கள் கட்சியில் 90 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனர் என கூறிய பின்னரும், திமுக அமைச்சர்களான கே.ஆர்.பெரியகருப்பன், பி.கே.சேகர்பாபு, வி.செந்தில்பாலாஜி, துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக முக்கிய நிர்வாகிகளான ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் ஆகியோரும் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய நிலையில் ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிராக ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி ஹிந்துக்களை ஒருங்கிணைக்க இந்த விவகாரத்தை பயன்படுத்திய பிறகு, ஆ.ராசா நாங்களும் ஹிந்துக்கள் தான், நீங்கள் வேறு ஹிந்துக்கள், நாங்கள் வேறு ஹிந்துக்கள் என பேசியுள்ளார்.
அதிமுகவில் என்ன தான் பிரச்சனை இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் ஆகிய இருவருமே ராசாவை கண்டித்துள்ளனர். இதை பேசியதன் மூலம் சிதறி கிடக்கும் அதிமுகவை ராசா பலப்படுத்துகிறாரா என எண்ணத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவாக பேசியுள்ளார். அவரை தவிர வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் ராசாவுக்கு ஆதரவாக பேசவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காத்து வருகிறார். ஆ.ராசா பேச்சை அங்கீகரித்தால் அது திமுகவுக்கு எதிராக ஹிந்துக்களை ஒன்று திரட்டிவிடக்கூடும் என ஸ்டாலின் கணக்கு போட்டிருக்கக்கூடும்.
சீமான், ராசாவின் சமூக வாக்குகளை குறிவைத்து நகர்கிறார். வடமாவட்டங்களில் உள்ள 65 பேரவைத்தொகுதிகளில் 54 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றதே திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முக்கிய காரணம். இப்பகுதியில் திமுக வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தது பறையர் சமூகம் தான். ஸ்டாலின் இந்த விவகாரத்தில் ஆ.ராசாவை கைவிட்டால், இச்சமூகத்தினர் சீமானுக்கு ஆதரவாக திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாதிய முரண்பாடா அல்லது மத முரண்பாடா என இதில் எதை கையாளுவது என்ற குழப்பத்தில் ஸ்டாலின் இருப்பதாக தெரிகிறது. அதனால் தான் ராசாவுக்கு ஆதரவாக ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். அதேவேளை ராசாவை தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்கவும் அனுமதிக்கிறார்.
இவ்வாறாக மத முரண்பாடு, ஜாதிய முரண்பாடு என இரு ஆயுதங்களாலும் தனக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது என கயிற்றின்மேல் நடந்துகொண்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே 2021 பேரவைத்தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் தாயார் அவதூராக பேசியதும், ஸ்டாலின் செருப்புடன் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டதும் தான் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய திமுக, 159 தொகுதிகளில் வெற்றி என்ற நிலையுடன் முடங்கியது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இதற்கு எதிரான பிரசாரம், திமுகவை வீழ்த்தி அதிமுகவுக்கு கைகொடுத்தது. எனவே, ஆ.ராசாவின் கருத்தியல் ரீதியான அரசியல், திமுகவுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது என்பதே உண்மை.
அதேபோல, இப்போது எழுந்துள்ள விவகாரத்தில் நஷ்டம் இல்லாமல் திமுக தப்பிக்கபோகிறதா என்பது ஸ்டாலின் கையில் தான் உள்ளது. இதை ஸ்டாலின் எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.